கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகம் சம்பியன்




 


(சுகிர்தகுமார் 0777113659) 


 அக்கரைப்பற்று கோளாவில் காந்தி விளையாட்டுக் கழக ஆதரவுடன் நடாத்தப்பட்ட அமரர் சறோஜா கணேசபிள்ளை அவர்களின் 30ஆம் ஆண்டு நிறைவின் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரில் கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
32 கழகங்களை உள்ளடக்கி 8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு கோளாவில் தியாயப்பர் பாலாத்தை பொது மைதானத்தில் இடம்பெற்ற சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டியில் திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி காந்தி விளையாட்டுக் கழகம் 2023 ம் ஆண்டின் முதலாவது சம்பியன்  வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை கோளாவில் காந்தி அணிக்கு வழங்கியது. இதன்படி துடுப்பெடுத்தாடிய காந்;தி அணி 8 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்களை பெற்றனர்
89 எனும் வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய குட்நிக் அணியினர் 8 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களை பெற்று 8 ஓட்டங்களால் தோல்வியை தழுவினர்.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக காந்தி அணியின் தேவராஜ் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்டநாயகனாக காந்தி அணியின் வீரர் சது தெரிவு செய்யப்பட்டார்.
போட்டி நிகழ்விற்கு அமரர் சறோஜா கணேசபிள்ளையின் புதல்;வரும் சத்தியம் வாழும்போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகருமான சத்தியமூர்த்தி அனுசரணை வழங்கியதுடன் கழக தலைவர் தேவராஜ் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சத்தியமூர்த்தி கயந்தினி மற்றும் கோளாவில் விக்னேஸ்வரர் ஆலய தலைவர் ஏரம்பமூர்த்தி மைதான காணியை அன்பளிப்பாக வழங்கிய துரையப்பா மற்றும் அமராவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.