ஐபிஎல் டி20 தொடரில் 2023ம் ஆண்டு சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிக்கு அடுத்தார்போல் தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த 233 ரன்கள் , ப்ளேஆஃப் சுற்றில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2014ல் சிஎஸ்கேவுக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் 226 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் இமாலய ஸ்கோரை அடித்து, தன்னை சாம்பியன் என்று மீண்டும் நிரூபித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் இந்த எழுச்சி, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
ரஷித் கான்: இவரது சுழல் பந்துவீச்சில் என்ன சிறப்பு?
5 மணி நேரங்களுக்கு முன்னர்
மும்பை போல தமிழ்நாட்டில் பெரிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் உருவாகாதது ஏன்?
24 மே 2023
தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகுடம் சூட்டிய மாய வித்தைக்காரர்
25 மே 2023
குறிப்பாக சுப்மான் கில்லின் முரட்டுத்தனமான பேட்டிங் ஃபார்ம், சிஎஸ்கே அணிக்கு பைனலில் சிம்ம சொப்னமாக அமையும். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 23 வயதான சுப்மான் கில் 60 பந்துகளில் 129 ரன்கள்(10சிக்ஸர், 7பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த சீசனில் சுப்மான் கில் அடித்த 3வது சதமாகும். சுப்மான் கில் பவுண்டரி, சிக்ஸர் மூலம் மட்டுமே 88 ரன்களைக் குவித்துவிட்டார். முதல் அரைசதத்தை 32பந்துகளிலும் அடுத்த 50 ரன்களை 17 பந்துகளிலும் கில் மின்னல் வேகத்தில்அடைந்தார்.
கில் ராஜ்ஜியம்
மழை காரணமாக ஆட்டம் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கினாலும், கில், சாஹா மந்தமாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் கில், சாஹா சேர்த்து 5 ஓவர்களில் 38 ரன்களையே குஜராத் சேர்த்திருந்தது. கிறிஸ் ஜோர்டன் வீசிய 6வது ஓவரிலிருந்துதான் கில் தனது ஆட்டத்தை டாப் கியருக்கு மாற்றி, சிக்ஸர் மழை பொழியத் தொடங்கினார். பவர்ப்ளே முடிவில் குஜராத் 50 ரன்கள் சேர்த்திருந்தது.
சாஹா தொடக்கத்தில் இருந்தே ஷாட்களை அடிக்க சிரமப்பட்டார். மத்வால் வீசிய பவுன்ஸர் சாஹாவின் ஹெல்மெட்டின் காதுப்பகுதியில் தாக்கியது. அதன்பின் சிறிது நேரமே தாக்குப்பிடித்த சாஹா 18 ரன்னில் சாவ்லா பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்துவந்த சாய் சுதர்சன், கில்லுக்கு ஒத்துழைத்து பேட் செய்தார்.
MI vs GT
பட மூலாதாரம்,BCCI/IPL
டேவிட் செய்த தவறு
கில் 30 ரன்கள் இருந்தபோது, மத்வால் பந்தில் அடித்த கேட்சை டிம் டேவிட் கோட்டை விட்டார். இந்த கேட்சை நழுவவிட்டதற்கு விலையை கடைசியில் மும்பை அணி கொடுத்தது. கேட்சை வாய்ப்பு நழுவவிட்டபின அடுத்த 40 பந்துகளில் கில் 99 ரன்களைச் சேர்த்து மும்பை அணியின் தோல்விக்கு அடித்தளமிட்டார்.
மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துகளை கில் சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டபோதெல்லாம் மைதானத்தில் ரோஹித் சர்மா தலையில் கை வைத்தும், முகத்தை மூடிக்கொண்டும் தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.
எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் சிக்ஸராகப் பறக்கவி்ட்ட கில்லின் முரட்டுத்தனமான ஹிட்டிங்கைப் பார்த்து மும்பை பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
மின்னல் வேக அரைசதம்
அதிரடியை வெளிப்படுத்திய கில் 32 பந்துகளில் அரைசதத்தை அடித்தார். அதன்பின் கில் ரன் குவிப்பு வேகம் ராக்கெட் வேகத்தில் சென்றது. மத்வால், சாவ்லா வீசிய 9 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விளாசிய கில், அடுத்த 17 பந்துகளில் 50 ரன்களை எட்டி 49 பந்துகளில் சதம் அடித்தார். சதம் அடித்தவுடன் கேமரூன் கிரீன் பந்தில் 2 சிக்ஸர்கள், பவுண்டரியை கில் விளாசினார்.
யார் பந்துவீசினாலும் சிக்ஸர்களாக அடித்த கில்லின் ஆட்டத்தைப் பார்த்து மும்பை பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர், எப்படி பந்துவீசுவதென்றே தெரியாமல் கையைக் கசக்கினர்.
ஏற்கெனவே கில்லுக்கு ஒருமுறை கேட்சை விட்ட டிம் டேவிட் 2வது முறையாக தவறவிடவில்லை. மத்வால் பந்துவீச்சில் கில் மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டை டேவிட் கேட்ச் பிடிக்கவே கில் 129 ரன்னில் வெளியேறினார். அதன்பின் சாய் சுதர்சனும் ரிட்டயர் ஹர்ட்டில் 43 ரன்னில் பெவிலியன் சென்றார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் சிறிய கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.
ஒட்டுமொத்தத்தில் குஜராத் அணியின் பேட்டிங் இன்னிங்ஸ் முழுவதுமே கில் ராஜ்ஜியம்தான்.
மும்பை நம்பிக்கையை உடைத்த கில்
லக்னெள அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய மத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தநிலையில் நேற்று 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை வாரி வழங்கினார். பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 45 ரன்கள்,ஜோர்டன் 4 ஓவர்களில் 56 ரன்கள் என வாரி வழங்கினர்.
இவர்கள் 3 பேர் மட்டுமே 153 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது. பெரன்டார்ப், கார்த்திகேயா மட்டுமே 7 ரன்கள் எக்கானமி வைத்திருந்தனர், மற்ற பந்துவீச்சாளர்கள் கில் புயலில் சிக்கி சின்னாபின்னமாகினர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மான் கில் அடித்த ஸ்கோர்தான் மிகப்பெரிய ஸ்கோராகும். சாய் சுதர்சன் பெரும்பாலும் கில்லுக்கு ஒத்துழைத்து பேட் செய்து 43 ரன்களில் ரிட்டயர் ஹர்ட்டில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா(28), ரஷித் கான்(5) கடைசி நேரத்தில் சிறிய கேமியோ ஆடி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆக, குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் முழுவதுமே கில்லின் ராஜ்ஜியமாகவே இருந்தது. கில்லின் ஆட்டம் மட்டுமே குஜராத் அணியின் பேட்டிங்கில் நீக்கமரநிறைந்திருந்தது. சுப்மான் கில் தன்னால் முடிந்தவரையிலான அதிகபட்ச பங்களிப்பை அளித்து அணியை பைனலுக்கு கொண்டு சென்றார்.
MI vs GT
பட மூலாதாரம்,BCCI/IPL
ஷாக் அளித்த ஷமி
மிகப்பெரிய ஸ்கோரை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் காயத்தால் களமிறங்கவில்லை என்பது பின்னடைவாக இருந்தது. அவருக்குப் பதிலாக நேஹல் வத்ரா, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து களமிறங்கினார். புதிய பந்தில் ஷமியின் பந்துவீச்சு ராக்கெட் போல் சீறிச்செல்லும் என்பதை உணரவில்லை. ஷமியின் முதல் ஓவரிலேயே வதேரா 4 ரன்னில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த சீசன் முழுவதும் ஃபார்மின்றி தவித்த ரோஹித் சர்மா 8 ரன்னில் ஷமி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இரு விக்கெட்டுகளை வீழ்த்தியபின் குஜராத் அணிக்கு நம்பிக்கை பிறந்தது. கேமரூன் 3 ரன்களில் காயத்தால் வெளியேறி பின்னர் களமிறங்கினார்.
MI vs GT
பட மூலாதாரம்,BCCI/IPL
திலக் வர்மா, சூர்யா நம்பிக்கை
குஜராத் அணி நம்பிக்கையை உடைக்கும் வகையில் திலக் வர்மா, சூர்யகுமார் பேட் செய்தனர். அதிலும் திலக் வர்மா, குஜராத் பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கினார். திலக் வர்மா களத்துக்கு வந்து சந்தித்த 4 பந்துகளில் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.
பர்ப்பிள் தொப்பி வைத்திருக்கும் ஷமி ஓவரில் 4 பவுண்டரிகளை திலக் வர்மா விளாசினார். 13 பந்துகளில் திலக் வர்மா 43 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை குஜராத்துக்கு இணையாக பயணிக்க வைத்தார். திலக் வர்மாவுக்கு செக் வைக்கும் நோக்கில் ரஷித் கானை பந்துவீச ஹார்திக் அழைத்தார்.
ரஷித் கான் ஓவரிலும் சிக்ஸர், பவுண்டரிகள் பறந்தநிலையில் அதே ஓவரில் கிளீன் போல்டாகி திலக் வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதன்பின் கேமரூன் கிரீன், சூர்யகுமார் சேர்ந்து அணியை வழிநடத்தினர். இருவரும் சேர்ந்து அடுத்த 5ஓவர்களில் 50 ரன்களைக் குவித்து மும்பைக்கு நம்பிக்கையூட்டினர். சூர்யகுமார் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
MI vs GT
பட மூலாதாரம்,BCCI/IPL
விக்கெட் சரிவு
கேமரூன் கிரீன் 30 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜோஷ் லிட்டில் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். சூர்யகுமார் மட்டும் தனிஒருவனாக ஆடி வந்தார், அவர் களத்தில் இருக்கும்வரை மும்பைக்கு வெற்றி சாத்தியம் என்று நம்பப்பட்டது.
திருப்புமுனையை ஏற்படுத்த 14 ஓவர்களுக்குப்பின் மோகித் சர்மாவை பந்துவீச ஹர்திக் அழைத்தார். மோகித் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே பலன் கிடைத்தது. ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்ற சூர்யகுமார் யாதவ், க்ளீன் போல்டாகி 61 ரன்னில் பெவிலியின் திரும்பினார்.
சூர்யகுமார் பெவிலியன் செல்லும்போது மும்பை அணியின் நம்பிக்கையையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டார். அதன்பின் சிறிதுநேரத்தில் மும்பை அணியின் இனிங்ஸே முடிந்துவிட்டது.
மோகித் சர்மா வீசிய அதே ஓவரில் சூர்ய குமாருக்குப்பின் களமிறங்கிய விஷ்னு 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் 2 ரன்னில் கால்காப்பில் வாங்கி ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மோகித் சர்மா வீசிய 2வது ஓவரில் ஜோர்டன்(2), சாவ்லா(0), கார்த்திகேயா ஆகியோரும் ஆட்டமிழந்து 171 ரன்னில் இன்னிங்ஸ் முடிந்தது. 155 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணிக்கு சவாலாக சென்ற மும்பை அணி, அடுத்த 16 ரன்களுக்குள் இன்னிங்ஸை இழந்து தோல்வியைத் தழுவியது.
MI vs GT
பட மூலாதாரம்,BCCI/IPL
மோகித், ரஷித், ஷமி திருப்புமுனை
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு சுப்மான் கில் ஒரு முக்கியக் காரணம் என்றால் பந்துவீச்சில் மோகித் சர்மா, ரஷித் கான், ஷமி ஆகியோரின் பங்களிப்பு மிகப்பெரியது. அதிலும் மும்பை அணிக்கு எதிராக 3 ஆட்டங்ககளிலும் விக்கெட் எடுக்காமல் இருந்த ஷமி தொடக்தத்திலேயே இரு விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கையை உடைத்தார்.
மும்பை அணியை வெற்றியை நோக்கி இழுத்துச் செல்ல முயன்ற திலக் வர்மா, கிரீன் இருவரையும் ரஷித் கான் பார்த்துக் கொண்டார், கடைசிவரிசை பேட்ஸ்மேன்களை மோகித் சர்மா ஆட்டமிழக்கச் செய்தார். அருமையாகப் பந்துவீசிய மோகித் சர்மா 2.2ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
ஐபிஎல் சீசனில் பர்ப்பிள் தொப்பி வைத்திருக்கும் ஷமி(28விக்கெட்டுகள்), 2வது இடத்தி்ல் இருக்கும் ரஷித் கான்(27), மோகித் சர்மா(24) 3வது இடம் ஆகியோர் குஜராத் அணியிலேயே இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
சுப்மான் கில் சேர்த்த 129 ரன்கள், ப்ளே ஆப் சுற்றில் தனிஒரு பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2014ல் சிஎஸ்கே அணிக்கு எதிராக கிங்ஸ்லெவன் பஞ்சாப் பேட்ஸ்மேன் சேவாக் 122 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகபட்சமாகும். டி20 போட்டிகளிலேயே ப்ளே ஆஃப்பில் கில் ஸ்கோர் 3வது அதிகபட்சமாகும்.
சுப்மான் கில் நேற்றைய ஆட்டத்தில் 7வது ஓவரில் இருந்து 16வது ஓவர்கள் வரை 36 பந்துகளைச் சந்தித்து 94 ரன்கள் குவித்தார். நடுப்பகுதி ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோர் செய்தது கிறிஸ் கெயில்(108), சேவாக்(107) ஆகியோர் மட்டுமே இருந்தனர். 3வதாக கில் இணைந்துவிட்டார்.
இந்த சீசனில் சுப்மான் கில் அடித்த 3வது சதமாகும். ஒரு சீசனில் 4 சதங்களை விராட் கோலி(2016), ஜாஸ் பட்லர்(2022) ஆகியோர் மட்டுமே அடித்துள்ளனர். அதற்கு அடுத்தார்போல் கில் அடித்துள்ளார். கில் அடித்த 3 சதங்களுமே கடைசி 4 இன்னிங்ஸில் அடிக்கப்பட்டவை.
இந்த சீசனில் மட்டும் கில் 851 ரன்கள் சேர்த்துள்ளார். ஒருசீசனில் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்த 3வது அதிகபட்ச ஸ்கோராகும். பட்லர் கடந்தசீசனில் 864ரன்கள் சேர்ததார். கோலி 2016ல் 973 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி அரங்கில் 8வது முறையாக ஆடிய கில் 4 அரைசதங்களையும், 2 சதங்களையும் அடித்துள்ளார்.
MI vs GT
பட மூலாதாரம்,BCCI/IPL
கில் சூப்பர் ஸ்டார்
குஜராஜ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ எங்கள் வெற்றிக்குப்பின் ஏராளமான கடின உழைப்பு இருக்கிறது, வீரர்கள் வெற்றிக்காக கடினமாக உழைத்தார்கள். சுப்மான் ஆட்டம் அற்புதம். எந்த நேரத்திலும் கில், தனது ஷாட்களின் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. தேசத்துக்கும், அணிக்கும் கில் ஒரு சூப்பர்ஸ்டார்.
நல்ல நிலையில் வீரர்களை வைத்திருக்க என்னால் முடிந்த பணிகளைச் செய்தேன். ஒவ்வொரு வீரரும் பொறுப்புடன் பணியைச் செய்தது அற்புதம். ரஷித் கான் விக்கெட் எடுத்தப்பின்புதான் ஆட்டம் என் கைகளுக்குத் திரும்பியது சிறந்த கிரிக்கெட் இதுவரை விளையாடியுள்ளோம், பைனலிலும் இதேபோன்று செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்
ஆடுகளத்தை குறை சொல்வதா?
ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப்பில் ஸ்வாரஸ்யத்தை அதிகப்படுத்த இதுபோன்ற பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியான ஆடுகளம் அமைக்கப்படுவது இயல்பாகும். அதிலும் ஹைஸ்கோரிங் பிட்ச் இருந்தால்தான் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது இயல்பு. மும்பை அணியாலும் இந்த ஸ்கோரை சேஸிங் செய்திருக்க முடியும், ஆனால், வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது, விரைவாக ஆட்டமிழந்தது, ஹிட்டர் ஜொலிக்காதது போன்றவை தோல்விக்கு காரணம்.
மற்றவகையில் முதலில் பேட் செய்யும் அணி அடிக்கும் ஸ்கோரை சேஸிங் செய்யவும் இந்த ஆடுகளம் ஒத்துழைக்கும். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காமல் அவர்களின் நம்பிக்கையை உடைத்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய பந்து நேராக பேட்ஸ்மேனை நோக்கியே சென்றது, ஸ்விங் என்பதே இல்லை, அதேபோல சுழற்பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தும் டர்ன் ஆகாமல் இருந்தது. இதைப் புரிந்து கொண்ட ரஷித் கான் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் வீசி திணறவிட்டார்.
இது போன்ற ஆடுகளங்கள் இரு அணிகளின் பேட்டிங் வல்லமையை காட்டுவதற்கு சரியாக இருக்கும் ஆனால், பந்துவீச்சாளர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்துவிடும்.
Post a Comment
Post a Comment