பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பைச் சேர்ந்த மதுஷிகன்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார்.
இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடையவுள்ளார்.
இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30கிலோ மீற்றர் தூரமுடைய நீரிணையை சுமார் 10 மணித்தியாலங்களில் நீந்திக் கரை சேருவதற்கு எதிர்பார்க்கிறார்.
மதுஷிகன் தனது சாதனைக்கான முன்னாயத்தமாக கல்கிஸை கடற்கரையில் 20கிலோ மீற்றர் தூரம் வரை நீந்தியுள்ளார்.
தற்போது 20 வயதான மதுஷிகன், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பன்னிரண்டு வயதில் தனது நீச்சல் பயிற்சியை ஆரம்பித்து மாகாண மற்றும் திறந்த மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.
இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வென்றெடுத்துள்ள மதுஷிகன் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன்; இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
தவேந்திரன் மதுஷிகன் தனது நீச்சல் திறமையினை சாதனையாக மாற்றுவதற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள், கடல் சார் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒஷியன் பயோம் என்ற அமைப்பு மற்றும் தனது பெற்றோர்களான தந்தை தங்கையா தவேந்திரன், தாய் அகல்யா ரோஷினி ஆகியோர் ஊக்குவிப்பதாக நினைவு கூர்ந்தார்.
Post a Comment
Post a Comment