ம.மா/ நு. சென்.கிளேயர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக வேலாயுதம் தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பத்தனை கெலிவத்தையை சேர்ந்த தோட்டத் தொழிலாளிகளான வேலாயுதம், மாரியாய் தம்பதியினரின் மூன்றாவது புதல்வர் ஆவார்.
தனது ஆரம்பக் கல்வியை கெலிவத்தை தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர்தர கல்வியை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் பயின்றார்.
கொட்டக்கலை யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விவசாய விஞ்ஞான பாட ஆசிரியராக தனது ஆசிரியர் பயிற்சியை முடித்து குயின்ஸ்பெரி த.வி, கொத்/ கட்டபுலா த.ம.வி , நு/ சென்.கிளையர் த.ம.வி ஆகியவற்றில் ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
கல்வித்துறை மட்டுமின்றி கலை இலக்கிய, சமூக ,அரசியல் செயற்பாடுகளிலும் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட இவர் மலையகத்தின் குறிப்பிட்டுக்கூறக்கூடிய கவிஞர்களுள் ஒருவராவார்.
வே.தினகரன் தனது 'கலைமாணி' பட்டத்தையும், 'மொழிபெயர்ப்பில் டிப்ளோமா' பாட நெறியையும் பேராதனை பல்கலைக்கழகத்திலும், 'பட்டப்பின் கல்வி டிப்ளோமா'வை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், 'பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா'வை தேசிய கல்வி நிறுவகத்திலும், 'வாண்மையாளருக்கான ஆங்கில சான்றிதழ் பாடநெறி'யை பெனிதெனிய தேசிய கல்வியற் கல்லூரியிலும், 'ஆசிரிய கல்வியில் முதுமாணி'ப்பட்டத்தினை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற மூன்றாம் தர அதிபர்களுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்த இவர் கடந்த ஜனவரி மாதம் மத்திய மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்ற அதிபர் வெற்றிட பாடசாலைகளுக்கான அதிபர் நேர்முகத் தேர்வில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டு நு/ சென்.கிளையர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment