கேகாலை – ஹெம்மாத்தகம அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா கடனுதவியின் கீழ், இந்த நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் நிர்மாணப் பணிகள் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் மேற்பார்வையின் கீழ் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாளாந்தம் 21,000 கனமீற்றர் நீரை சுத்திகரிக்கக் கூடிய கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், 7 சேவை நீர்த்தேக்கங்கள், 37 கிலோமீற்றர் பரிமாற்றக் குழாய் அமைப்பு, 120 கிலோமீற்றர் விநியோக குழாய் அமைப்பு ஆகியன இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், 52,300 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 169,000 மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதோடு, அதன் கீழ் 25,200 புதிய நீர் இணைப்புகள் வழங்கப்படும்.
இதனைத்தவிர ஏற்கனவே உள்ள 27,100 நீர் இணைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கையளித்த ஜனாதிபதி, நீர் கட்டமைப்பையும் திறந்து வைத்தார். பின்னர் குடிநீர் திட்ட வளாகத்தையும் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment