காரைதீவு கோட்ட மட்ட விளையாட்டு விழா தொடங்கியது : தொடக்க விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் இப்ராஹிம் கௌரவிக்கப்பட்டார்.
(பீ.எம்.நாஸிக், நூருல் ஹுதா உமர்)
காரைதீவு கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உடற்கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் அவர்களின் நெறிப்படுத்தலில் காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஜெ. டேவிட் தலைமையில் சுவாமி விபுலானந்தா மத்திய கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று (03) தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சர்வமத பிராத்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
காரைதீவு கோட்டத்தின் பாடசாலைகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் எனப்பலரும் புடைசூழ இந்நிகழ்வில் வைத்து அண்மையில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹிம் அவர்கள் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவர் தொடர்பிலான வாழ்த்துரையை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அதிபர் எம். சுந்தரராஜன் வழங்கினார்.
காரைதீவு கோட்டத்தின் தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் ஏற்பாடு செய்த 2023 ம் ஆண்டுக்கான கோட்டமட்ட விளையாட்டு விழாவின் தொடக்க நிகழ்வில் மாளிகைக்காடு கமு/கமு/அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர், கமு/கமு/ ஷண்முகா மகா வித்தியாலய அதிபர் எம். மணிமாறன் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment