கல்முனை கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் : சம்பியனானது பஹ்ரியா இரண்டாமிடம் கல்முனை மிஸ்பாஹ் வசமானது !
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (12) கோலாகலமாக நடைபெற்றது.
வைபகரீதியாக இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கோட்டமட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியலாளர் ஏ.எம். ஸாஹிர், வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், கல்முனை மாநகர உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அசீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் உட்பட பிரமுகர்கள் பலரும் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கல்முனை கோட்டத்தில் உள்ள கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றியதுடன் 125 போட்டி நிகழ்சிகள் நடைபெற்று வெற்றிபெற்ற வீரர்கள் இறுதிநாள் நிகழ்வில் பரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை மாணவர்களின் கண்கவர் அலங்கார அணிவகுப்புக்களும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் கோட்டத்தின் அதிபர்கள், பாடசாலைகளின் பிரதிநிதிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர். புள்ளிகளின் அடிப்படையில் இந்த வருடம் பவளவிழா காணும் கல்முனை கமு/கமு/அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம் கோட்டத்தின் சம்பியன் பட்டத்தையும், இரண்டாம் இடத்தை கல்முனை கமு/கமு/ அல்- மிஸ்பா மகா வித்தியாலயம் தனதாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment