X-Press Pearl கப்பலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அந்நாட்டின் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட்ட பின்னர் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படுமென சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நட்டஈடு தொடர்பான வழக்கு நேற்று(15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அந்நாட்டு நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திகதிக்குள் இழப்பீடு தொடர்பான வழக்கானது சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா, இல்லையா என்பதை அறிவிக்கப்பட வேண்டுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை எல்லையில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பலால் ஏற்பட்ட சேதங்களை மீள கணக்கிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், சட்டத்தரணி அசேல ரெக்கேவ தெரிவித்தார்.
இந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் X-Press Pearl கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.
X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீயினால் நாட்டின் கடல் வளத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மாத்திரமே இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.
புதிய கணக்கீடுகளுக்கு பின்னர் சேதங்களுக்கான முழு இழப்பீடாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ள கிட்டத்தட்ட 6.5 பில்லியன் டொலர் தொகை மேலும் அதிகரிக்கலாமென கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment