நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுவக்கர் தலைமையில் வேந்தர் கௌரவ பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறை பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இரண்டு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளன.
முதல் அமர்வில் கலை கலாசார, தொழில்நுட்ப பீடங்களைச் சேர்ந்த 395 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 371 மாணவர்களும், மூன்றாவது அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 380 மாணவர்களும் பட்டங்களை பெறவுள்ளனர்.
இரண்டாம் நாள் அமர்வில் (நான்காவது அமர்வில்) பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 332 மாணவர்கள் பட்டங்கள் பெறவுள்ளனர். ஐந்தாவது அமர்வில் கலை கலாசார, முகாமைத்துவ - வர்த்தக பீடங்களில் இணைந்து கல்வி கற்ற 374 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், வியாபார நிருவாகம், முகாமைத்துவம், தமிழ் உள்ளிட்ட துறைகளில் பட்டப்பின்படிப்புக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதுமாணி, முதுதத்துவமாணி பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு, பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டலுக்கமைய நடத்துவதற்கு பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளது.
Post a Comment
Post a Comment