(வி.ரி. சகாதேவராஜா)
1990களில் இடம்பெயர்ந்த பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராம மக்கள் 33 வருடங்களின் பின் மீள்குடியேற அனுமதி கிடைத்திருக்கின்றது.
226 பேரில் முதல் கட்டமாக 76 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஒருவருக்கு 1 ஏக்கர் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். பயிர்ச்செய்கைக்காக 1 ஏக்கர் காணியும் வீடு அமைக்க 20 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படவிருக்கிறது.
காடுமண்டி கிடந்த அப் பிரதேசம் கடந்த மூன்று தினங்களாக ஜேசிபி இயந்திரம் மூலம் துப்பரவாக்கப்பட்டு வருகிறது.
பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளரும் சமுக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்தீபன் அரச அனுமதியுடன் இப் பணியில் ஈடுபட்டு வருகிறார். கனகர் கிராம மக்களும் படையினரும்
சமுகமளித்திருந்தனர்.
அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது. அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம் அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் பிரதேசசெயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்ந்தது.
அது இன்று கட்டம் கட்டமாக நிறைவேறத்தொடங்கியிருப்பதுகண்டு மகிழச்சியடையலாம்.
Post a Comment
Post a Comment