மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுக்கான கொடுப்பணவுகள்




 


அஸ்-ஸுஹரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுக்கான கொடுப்பணவுகள் கையளிப்பும் இஃப்தார் நிகழ்வும்.


(நூருள் ஹுதா உமர், எஸ்.அஷ்ரப்கான், பாறூக் ஷிஹான்)


கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தினது பழைய மாணவ மாணவிகளினால் (AZ Zuharian Past Pupils Association) முன்னெடுக்கப்பட்டு வரும் அஸ்-ஸுஹராவுடன் மீள் இணைவோம் எனும் தொனிப்பொருளில் உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைத்திட்டத்தின் (பகுதி 2) கீழ் புதிய கல்வியாண்டிற்கான தாய் தந்தையை இழந்த விசேட தேவையுடைய தெரிவு செய்யப்பட்ட சுமார் நூறு மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்களுக்கான இரண்டு இலட்சம் கொடுப்பனவுகளை பாடசாலையினது பழைய மாணவ மாணவிகள் அமையத்தினது செயலாளர் எஸ். எச். எம். அஜ்வத் அவர்களினால் பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியாவிடம் கையளிக்கும் நிகழ்வும், விசேட இஃப்தார் நிகழ்வும் இன்று சனிக்கிழமை (15)  பாடசாலையில் நடைபெற்றது.  


இந்நிகழ்வில் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி வீ. சம் சம், பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எம். டீ.ஏ. அஸீஸ், ஏ. எல். ஏ. கமால், வலய கல்வி அலுவலக உதவியாளர் எம்.ஐ. ஜெமீல், பாடசாலை பழைய மாணவ மாணவிகள் அமையத்தின் பொருளாளர் ஏ. ஹஸீனா பானு, உப செயலாளர் எம். எம். ஷமீலுள் இலாஹி  உதவிப்பொருளாளர் காமிலா காரியப்பர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். 


இப்பாடசாலையினது பழைய மாணவ மாணவிகள் அமையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைத்திட்டத்தின் (பகுதி 1) கீழ் கடந்த வருடம் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் இதுவரை இத்திட்டத்தின்  கீழ் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான வேலை திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டடுள்ளமை  குறிப்பிடதக்கதாகும்.


மேலும் அஸ் ஸூஹரா வித்தியாலயத்தினது பழைய மாணவ மாணவிகளினால் (AZ Zuharian Past Pupils Association) எதிர்காலத்தில் பாடசாலைக்கு தேவையான வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல விடயங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 


இறுதியாக  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.