“இந்தியில் பேச வேண்டாம்…” மனைவியை தமிழில் பேச சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்




 


சென்னை: 

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவியுடன் மேடையில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு உடன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ரஹ்மான் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தார். சாய்ரா பானுவும் மேடைக்கு வந்தார். இருவரும் மேடையில் நின்று கொண்டிருக்கும் போது, சாய்ரா பானு பேச வேண்டிய சூழல் வந்துள்ளது. அப்போது அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியிடம் ‘இந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள்’ எனக் கூறுகிறார்.

இதை கேட்ட அங்கிருந்த ரசிகர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்கள் எழுந்தது. பின்னர், சாய்ரா பானு கூட்டத்தை வாழ்த்தி, “மன்னிக்கவும், என்னால் தமிழில் சரளமாக பேச முடியாது. எனவே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், ஏனென்றால் அவரது குரல் எனக்கு மிகவும் பிடித்தது. நான் அவரது குரலால் அவரை நேசித்தேன். அவ்வளவுதான். என்னால் சொல்ல முடியும்.” என சுருக்கமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.