தனியார் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிப்பு




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தொடர்பாக தனியார் ஊடகங்களில்  அன்மையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஆலையடிவேம்பு பிரதேச சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று(12) மாலை அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது ஆலையடிவேம்பு பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இளைஞர்கள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளருக்கு எதிராக கிராம உத்தியோகத்தர்களினால் பொது நிருவாக அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட கடிதம் எதுவும் தம்மால் அனுப்பி வைக்கப்பட்டவில்லை என்றும் இதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தாம் எவ்விதத்திலும் மன உளைச்சலுக்கு உள்ளாகவில்லை என்றும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களினாலும் கையொப்பமிடப்பட்ட மறுப்பறிக்கை காண்பிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண் பிரதேச தனக்கு உதவிகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் அங்கு சென்றதாகவும் இவ்வாறு அங்கு நடைபெறும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்;
மேலும் பிரதேச செயலகத்தால் தனக்கு 10 இலட்சம் பெறுமதியான வீடொன்று வழங்கப்பட்டதாகவும் பிரதேச செயலகத்தில் தனக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுவதாகவும் பிரதேச செயலாளருக்கு எதிராக தான் செயற்படவில்லை என்றும் தன்னை பெண் ஒருவரே அங்கு அழைத்துச் சென்றதாகவும் வாக்குமூலமும் அளித்தார்.
அத்தோடு கலந்து கொண்ட பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஓய்வு பெற்ற அரச உயர் அதிகாரிகளும் ஒளிபரப்பட்ட செய்தி அறிக்கைக்கு எதிராக தமது கவலையினை தெரிவித்ததுடன் உண்மை தன்மை தொடர்பில் நேரடி களவிஜயமொன்றை மேற்கொண்டு குறித்த ஊடகம் தமது செய்தியினை மீள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 அத்தோடு சம்மந்தப்பட்ட ஊடகத்தின் பிரதானி மற்றும் செய்தி ஆசிரியர் பொது நிருவாக அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கான மகஜர்களை தயாரித்து அதில் அனைத்து சமூக அமைப்புக்களும் கையொப்பமிட்டு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இதேநேரம் உண்மை நிலையினை வெளிக்கொண்டு வரும் பொருட்டு குறித்த ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டபோதும் அவர்கள் சமூகமளிக்காமையிட்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் அங்கு கையொப்பமிடப்பட்ட மகஜர்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்து.
இலங்கையில் வாழும் மக்களின் நம்பிக்கையினை பெற்ற தமிழ் ஊடகம் எனும் அடிப்படையிலும் உண்மையான செய்திகளை வெளிக்கொண்டுவரும் ஊடகம் எனும் அடிப்படையிலும் குறித்த தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிக்கும் அதேநேரம் அன்மையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தொடர்பில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தொடர்பில் சமூக அமைப்புக்கள் எனும் அடிப்படையிலும் இப்பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் எனும் வகையிலும் பெரும் கவலை அடைந்துள்ளோம்.
இச்செய்தி அறிக்கையில் ஒன்றோடு ஒன்று தொடர்பிலாத முரண்பாடான உண்மைத்தகவலை உள்வாங்காத பிரதேச செயலாளரை வேண்டுமென்றே அவமதிக்கும் செய்தியாக அமைந்துள்ளமை தொடர்பில் மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்வதுடன் அதன் பின்னணி தொடர்பிலும் பின்வரும் விடயங்களை தெரியப்படுத்துகின்றோம்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக கடமையாற்றும் திரு. வினாசித்தம்பி பபாகரன் அவர்கள் தமது கடமையினை 2020.06.19ஆம் திகதி பொறுப்பேற்றதன் பின்னர் இங்கு வேரூன்றி காணப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத நில அபகரிப்பிற்கு எதிரான வழக்குத்தாக்கல்கள் பிரதேசத்தின் பிரதான வளமாக காணப்படும் பெரியகளப்பு நில ஆக்கிரமிப்பினை தடுக்கும் நடவடிக்கை என பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
பிரதேச நன்மைகருதி இவரால் எடுக்கப்படும் காத்திரமான நடவடிக்கைகளை பொறுக்க முடியாத போதைப்பொருள் வியாபாரிகளும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பாளர்களும்; இவருக்கு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன் கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இது தொடர்பான வழக்கு பொலிசாரினால் நீதிமன்றில் நடாத்தியும் செல்லப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் 28000 ஆயிரம் மக்கள் வாழும் பகுதியில் கடந்த 2023.03.08ஆம் திகதி வெறுமனே ஒரு சில அப்பாவி பொதுமக்களை பிழையான முறையில் வழிநடத்தி நிவாரணம் பெற்றுத்தருவதாக கூறி சுமார் 50 பேரை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைத்து போராட்டம் எனும் பெயரில் பிழையாக வழிநடத்தியமைமையும் தெரியவருகின்றது.
இதற்கு பின்புலமாக செயற்பட்ட பெண் ஒருவர் ஆலையடிவேம்பு பிரதேத்தை சேர்ந்தவர் அல்ல எனவும் அவர் தமண பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்பவர் எனவும் தெரியவருகின்றது. அவரது சகோதரர் ஒருவரின் அரச காணி அத்துமீறலை தடுத்த பிரதேச செயலாளருக்கு அவதூறு விளைவிக்கும் முகமாகவே மேற்படி ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த 2023.04.09 ஆம் திகதி தங்களது ஊடகத்தில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அச்செய்தி அறிக்கையில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எமது விளக்கம்.
குற்றம் 1 - கிராம அலுவலர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அது தொடர்பான முறைப்பாட்டை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பபட்டதாக தெரிவித்தமை
விளக்கம் - அவ்வாறான எந்தவித மன உளைச்சலும் தங்களுக்கு இல்லை எனவும் அவ்வாறு எவ்வித குற்றச்சாட்டையும் தாங்கள் முன்வைக்கவில்லை எனவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் கிராம அலுவலர்கள் எழுத்து மூலமான மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு 2  அம்பாரை மாவட்ட செயலகம் முன்னால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்
விளக்கம் இது தொடர்பான தகவல் முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு 3  சின்னமுகத்துவார அகழ்வும் வெள்ளப்பாதிப்பும்
விளக்கம்  வெள்ளப்பாதிப்பிற்கு காரணம் முறையான வடிகான் இன்மையாகும். மேலும் பெரிய களப்பு என்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமகாவும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் மூலமாகவும் காணப்படுகின்றது. சின்னமுகத்துவார அடிக்கடி அகழ்வின் மூலம் களப்பின் நீர் வெளியேற்றப்பட்டு  நீர்மட்டம் குறைவடைவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. நிலத்தடி நீர் மட்டம் குறைவடைந்து காலப்போக்கில் 13000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் வரட்சியடையும் நிலையும் தோன்றும்.
மேலும் கோளாவில் 03 மாரியம்மன் ஆலய விளையாட்டுத்திடல் காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் அரச நிதியில் அதனை அபிவிருத்தி செய்த தேசிய வேலைத்திட்டமாகும். இதனால் போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை மீட்டெடுத்து விளையாட்டின் பக்கம் திருப்புவதற்காக செய்யப்பட்ட நல்ல நோக்கமாகும்.
இத்திடல் அமைந்துள்ள இடம் ஏற்கனவே விளையாட்டு மைதானம் அமைந்த இடமாகும். இது எவ்விதத்திலும் வடிச்சலை பாதிக்காது என்பது உண்மையாகும். தங்களால் காண்பிக்கப்பட்ட காட்சியானது ஆலையடிவேம்பு பகுதியில் கனமழை பொழிந்து ஊரே வெள்ளக்காடாக காட்சியளித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டதாகும். மேலும் இம்மைதானம் கடலிலிருந்து சுமார் 900 மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. அத்துடன் மைதானத்திற்கு அருகில் அரச மற்றும் தனியார் கட்டடங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மைதானத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச சபையால் மின்சாரம் ஒளிவிளக்குகள் வழங்கப்பட்டுள்ளமை சபையின் அனுமதி பெற்ற செயல் என்பது தெளிவாகின்றது. இம்மைதானம் அமைக்கப்பட்ட காலத்தில் காணப்பட்ட சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றில் இருந்து அனுமதி பெறப்படவில்லை என்பது உண்மை. இது ஒரு பிரதேச செயலாளரை இடமாற்றம் கோருமளவிற்கு பாரிய குற்றமா என்பதே எமது கேள்வியாக அமைந்துள்ளது.
குற்றச்சாட்டு 4  ஒரு அரச காணி அரச காணியல்ல என அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
விளக்கம்  மேற்படி அறிக்கை பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டது உண்மை. இருப்பினும் அது உடன் சீர் செய்யப்பட்டு அறிக்கை செய்யப்பட்டதன் பின்னரே முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்காணி அருகிலுள்ள காணிகள் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு தனியார் உறுதிகள் எழுதப்பட்ட அடிப்படையிலும் அவ்விடத்திற்கான கிராம இறுதி வரைபடம் இல்லாமையினாலும் அத்தவறு நடந்ததாக பிரதேச செயலாளரால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு 5 இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பிரதேச செயலாளர் குற்றம் இழைத்தவர் என அறிக்கை செய்யப்பட்டது.
விளக்கம் மேற்படி விடயமானது 2008 ஆம் ஆண்டு அரச நிதியில் கட்டப்பட்ட மீனவர் கட்டடம் 2018ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டது. இதனை அந்த காலத்தில் தங்களுக்கு காணப்பட்ட செல்வாக்கினை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொண்டது. அது தொடர்பில் மீனவர்களால் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்;டு பின்னர் உரிய நியாயம் கிடைக்காமையினால் பின்வாங்கப்பட்டது. மேலும் 2018ஆம் ஆண்டு இது மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரிக்கப்பட்டது. இருப்பினும் 2020 ஆம் ஆண்டு பதவி நிலை பொறுப்பேற்ற பிரதேச செயலாளருக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அதனை மீண்டும் விசாரிக்க பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் விசாரணை மேற்கொண்டு அதனை மீள் அளவீடு செய்ய பரிந்துரை செய்தது. அத்தோடு நீதிமன்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறான பின்னணியை ஆராயும்போது இது பிரதேச செயலாளரின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட சட்டவிரோத கும்பலின் பின்னணியிலேயே பக்கச்சார்பான முறையில் தயாரிக்கப்பட்ட படங்களும் காட்சிகளும் ஆவணமாக காட்டப்பட்டது என்பது தெளிவாகின்றது. இது தங்களது ஊடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான ஒரு தரப்பினரின் செயற்பாடாக எண்ணத் தோன்றுகின்றது.
ஒரு சிலரது தவறான தகவல்களையே இச்செய்தியில் உள்வாங்கப்பட்டுள்ளதை உணருகின்றோம்.

இது இவ்வாறிருக்க செய்தி அறி;க்கையில் சின்னமுகத்துவாரத்தை சின்னமுத்து ஆறு என தவறாக குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் களப்பினை ஆக்கிரமிக்கும் சிலருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட விரும்புகின்றோம்.
இதற்கு மேலாக கிராம உத்தியோகத்தர்களை பிழையாக வழிநடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதை மறுப்பதுடன் அவர்களது மறுப்பறிக்கையினையும் இணைத்துள்ளோம்.
ஆகவே பொறுப்புள்ள ஊடகம் எனும் அடிப்படையில் தங்களது சுயாதீன குழுவொன்றை இங்கு அனுப்பி வைத்து களவிஜயத்தின் பின்னர் உண்மைத்தன்மையை அறிந்து செய்தியினை மீள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.