'ஊடக தர்மத்தை வலுப்படுத்தலும் அதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தலும்'





 (காரைதீவு   சகா)


 'ஊடக தர்மத்தை வலுப்படுத்தலும் அதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தலும்' எனும் தொனிப் பொருளில் திருக்கோவில் மற்றும் சம்மாந்துறை வலய மாணவர் குழுத்தலைவர்களுக்கான செயலமர்வொன்று அக்கரைப்பற்றில் நடாத்தப்பட்டது.

SWOAD  நிறுவனமானது EMPOWER செயற்திட்டத்தின் கீழ் ஊடக தர்மத்தை வலுப்படுத்தலும் அதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தலும் எனும் தொனிப்பொருளில் 1ம் மாணவர் குழுவினர்களுக்கான செயலமர்வு  நேற்று முன்தினம் அக்கரைப்பற்று சுவாட்  தலைமையலுவலக பயிற்சி மண்டபத்தில் திட்ட இணைப்பாளர் .க.பிறேமலதனின் வழிகாட்டலின் கீழ் நடாத்தப்பட்டது.

இச்செயலமர்வை சம்மாந்துறை வலயக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா   நடாத்தினார்.
 இச்செயலமர்வில் ஊடக தர்மம், ஊடக ஒழுக்க நெறிவிதிகள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு பிறருக்கு தீங்கிழைக்காதவாறு சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவது போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

 இச்செயலமர்வில் திருக்கோவில் சக்தி வித்தியாலயம், விநாயகர் மகாவித்தியாலயம்,  நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம், நாவிதன்வெளி கலைமகள் வித்தியாலயம், நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயம், சம்மாந்துறை அல்-அர்சத் மகாவித்தியாலயம், சம்மாந்துறை செந்நெல் சாகிரா வித்தியாலயம் மற்றும் இறக்காமம் அல்-அமீன் மகாவித்தியாலயம், இறக்காமம் அல்-அஸ்ரப் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 30மாணவர்கள் கலந்து கொண்டனர்.