ஒற்றைக்கண் யானையே காரணம்





 வி.சுகிர்தகுமார் 0777113659  


  அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கவடாப்பிட்டி மற்றும் கண்ணகிகிராமத்தில் யானையின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீதிக்கு இறங்கி போராடுவதற்கும் தயாராகிவருகின்றனர்.
நேற்றிரவு (05) கவடாப்பிட்டி கிராமத்தில் உள்நுழைந்த யானை இராசலெட்சுமி என்பவரது வீட்டை உடைத்து அங்கிருந்த நெல்மூடைகளையும் இழுத்துச் சென்றுள்ளது.  அத்தோடு இரு தினங்களுக்கு முன்னர் கண்ணகிகிராமத்திலும் தனது அட்டகாசத்தினை காட்டிய யானை அங்குள்ள குடியிருப்புக்களையும் பயிரிடப்பட்ட  பயிரினங்களையும் உடமைகளையும் துவம்சம் செய்துள்ளது.

இதேநேரம் அன்மைக்காலமாக கவடாப்பிட்டி மகாசக்திபுரம் கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருகின்றமையும் இதனால் அங்கு வாழும் மக்களும் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இது இவ்வாறிருக்க சில மாதங்களுக்கு முன்னர் கண்ணகிகிராமத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளான பெண்ணொருவர் பலியானதுடன் வயல் பிரதேசத்தில் தாக்கப்பட்ட ஆண் ஒருவரும்  தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் யானையின் தாக்குதலை கட்டுப்படுத்த இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களை இணைத்து குழுவாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் முடிவெடுக்கப்பட்டதுடன் குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசாங்கத்தின் உதவியினை பெறுவது எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனாலும் அரசாங்கமோ எந்த அரசியல்வாதிகளோ இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்தும் யானையின் அச்சுறுத்தல் இடம்பெற்று வருவதுடன்; ஒற்றைக்கண் யானை ஒன்றே இவ்வாறு தொடர் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும் அம்மக்கள் சார்பில் கண்ணகிகிராம சனசமூக நிலைய தலைவர் கண்ணனும் கூறுகின்றனர்.
ஆகவே குறித்த யானையினை வெளியேற்ற வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இல்லாத பட்சத்தில் தாங்கள் வீதிக்கி இறங்கி போராட வேண்டிய நிலைவரும் எனவும் தெரிவித்தனர்.