அம்பாரை மாவட்ட சோதனைச் சாவடிகள் காலை வேளையில் தளர்வுறும்




 


நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணியின் வேண்டுகோளின் பிரகாரம், நிந்தவூர் பிரதான வீதியிலும், அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியிலும் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியினை, வாரநாட்களில் காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை அகற்றுவதற்கு இராணுவத்தின் 24ம் படைப்பிரிவின் General Commanding Officer Major General விபுல சந்த்ரசிரி அனுமதி வழங்கியுள்ளார்.

இன்று (06) காலை மல்வத்தையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படைப்பிரிவின் இராணுவ முகாமில் நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பின் பொழுதே ஜி.சி.ஓ அவர்களினால் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
குறிப்பாக தற்போது இந்த பிரதான வீதியின் ஊடாக அதிகமான உத்தியோகத்தர்கள் காலை வேளையில் தாங்கள் கடமை புரியும் அலுவலகங்களுக்குச் செல்வதினால் பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்து வருவதுடன், இந்த சோதனைச் சாவடியில் தரித்து நிற்பதனால் சில நிமிடங்கள் தாமதமாக கைவிரல் அடையாளத்தின் மூலம் தங்கள் வரவினை பதிவு செய்ய வேண்டிய அசௌகரியமான நிலைமையும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் பற்றி நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணியின் செயற்பாட்டாளர்களான ஊடகவியலாளர் சுலைமான் றாபி மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஆயுர்வேத துறைக்கான இணைப்பாளருமான சுலைமான் நாசிறூன் ஆகியோர், இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்த்ரசிறி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் (அலுவலக நாட்களில்) காலை 6 மணி முதல் காலை 9 மணி வரைக்கும் குறித்த இராணுவ சோதனைச் சாவடியை அகற்றுவதற்கு GOC அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்.