மாளிகைக்காடு நிருபர்
காரைதீவு பிரதேச காரைதீவு விபுலானந்தா சதுக்கம் முதல் மாவடிப்பள்ளி வரை உள்ள தெரு விளக்குகளை இரவு நேரங்களில் ஒளிர செய்யாமையினால் அவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும், மாவடிப்பள்ளி மக்களும் படும் கஷ்டங்களை எடுத்தரைத்த அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தெருவிளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரை மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன நிகழ்வொன்றில் வைத்து நேரடியாக கேட்டுக்கொண்டார்.
மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன ஆண்டு விழாவில் விசேட அதிதியாக கலந்த கொண்ட ஹுதா உமர், பொதுமக்களின் அசௌகரியத்தை போக்க மாவடிப்பள்ளியில் இந்த தெருவிளக்கை அமைக்க ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா விடுத்த வேண்டுகோளையும், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியலாளர் என்.டி. சிராஜுதின் எடுத்த முனைப்பையும் தனது உரையில் நினைவுபடுத்தினார். மேலும் சம்மாந்துறையில் அண்மையில் யானைத்ததாக்குதலில் பலியான விடயங்கள், அறுவடை காலம் என்பதால் யானைகளின் நடமாட்டம் உள்ளமை போன்ற விடயங்களையும் விளக்கி இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ள மின்னிணைப்பை மீள இணைப்பு செய்து உடனடியாக தெரு விளக்கை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரை கேட்டுக்கொண்டார். மேலும் மாவடிப்பள்ளி பிரதேச கல்வி மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு போன்ற விடயங்களையும் விளக்கினார்.
இந்த வேண்டுகோளுக்கு தனது உரையில் பதிலளித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், மின்பட்டியல் நிலுவை செலுத்தப்படாமையினால் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தை ஊடகவியலாளராகவும் பல தடவைகள் ஹுதா உமர் சுட்டிக்காட்டியுள்ளார். இங்கும் அது தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் செவ்வாய்கிழமையே வேலை நாளாக இருப்பதனால் அந்த தெருவிளக்குகளை மீள மின்னிணைப்பு செய்து ஒளிர செய்ய தான் பிரதேச சபை செயலாளரை பணிக்க உள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை மீண்டும் அந்த மின்விளக்குகள் ஒளிரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விளக்குகள் பொருத்தப்பட்ட போது எங்களிடம் தெரிவிக்கப்படவில்லை. அதனை நாங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கேட்டபோது அவர்கள் தமக்கு சொந்தமான வேலையென்றும் அதை நாங்கள் தடுக்கப்போகின்றோம் என்ற தோரணையிலும் கருத்து வெளியிட்டனர். காரைதீவு பிரதேச சபை காலத்தில் நாங்கள் கூடிய அபிவிருத்தியை செய்தது மாவடிப்பள்ளியில் தான். இனமத பேதமில்லாமல் நான் சேவையாற்றியுள்ளேன். என் மீது பலரும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அவர்களின் விமர்சனங்களுடன் நான் நேரடியாக விவாதிக்க தயாராக உள்ளேன்.
கொரோனா காலத்தில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது முஸ்லிங்களுடன் சேர்ந்து நான் போராடிய போது தாம் எதுவும் செய்யாமல் முடங்கி கிடந்து மொட்டுக்கு ஆதரவு திரட்டியவர்கள் இப்போது தான் வெளியே வந்து தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள என்னை இனவாதியாக சித்தரிக்கிறார்கள். நான் கொரோனா காலத்தில் நிறைய உதவிகளை முஸ்லிங்களுக்கு செய்துள்ளேன். நீர் இணைப்புக்களை, மின்சார இணைப்புக்களை கூட எனது சொந்த நிதியில் வழங்கியுள்ளேன். நான் மக்களுக்காக மக்களுடன் பயணிக்கிறேன். விமர்சனங்களை நான் அலட்டிக்கொள்வதில்லை என்றார்.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ் ஜெகராஜன், கல்முனை கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரணீஸ், மாவடிப்பள்ளி மேற்கு கிராம நிலதாரி எம்.ஐ. ஹஸீனா உட்பட முக்கியஸ்தர்கள், மாவடிப்பள்ளி ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment