( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சத்திர சிகிச்சைக்கான
மருத்துவ முதுமாணி(MD in Surgery) பரீட்சையில் சித்திபெற்று சத்திர சிகிச்சை நிபுணர்களாக பட்டப் பின் பட்டம் பெற்றுள்ளனர்.
காரைதீவு .1 விபுலானந்த வீதியில் வதியும் வைத்திய அதிகாரி டாக்டர் நடேசன் அகிலன் மற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் நடேசன் பகீரதன் ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள் இருவர், ஒரே வேளையில் இம் மருத்துவ முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் பல வைத்தியர்கள் உருவாகிய போதிலும் வரலாற்றில் முதல் தடவையாக சகோதரர் இருவர் முதல் தடவையாக சத்திர சிகிச்சை நிபுணர்களாக தெரிவாகி இருப்பது வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆகும்.
கடந்த 2023-03-01ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டம் வழங்கப்பட்டது.
தற்சமயம், வைத்திய கலாநிதி டாக்டர் நடேசன் பகீரதன் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், அவரது சகோதரர் வைத்திய அதிகாரி டாக்டர் நடேசன் அகிலன் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையிலும் பணியாற்றி வருகின்றனர்.
வைத்திய கலாநிதி நடேசன் அகிலன் 2006ம் ஆண்டு க.பொ.த. உயர்தர உயிரியல் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக தெரிவாகி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
சாதனை படைத்த மேற்படி இரு சகோதரர்களின் மற்றும் ஒரு சகோதரன் பொறியியலாளராகவும், ஒரு சகோதரி மிருகபரிபாலன வைத்திய அதிகாரியாகவும், மற்றுமொரு சகோதரி பிரபல பல் வைத்திய அதிகாரி டாக்டர் த.உமாசங்கரின் மனைவியுமாவார்.
Post a Comment
Post a Comment