♦Dr.M.A.Mohamed Saleem:
இழப்பின் தீராத வலி
கலாநிதி. எம்.ஏ.முஹம்மத் சலீம் இன்று காலை வபாத்தானார் என்ற செய்தி மிகவும் கவலை தருகிறது. அவரது இழப்பை பாரமாக உணர்கிறேன்.
அக்கரைப்பற்றின் முதல் கலாநிதி இவர்தான். விஞ்ஞானப் பட்டதாரியாகி, பின்னர் சூழலியல் துறையில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஊரவர்களும் அவரது உறவினர்களும் 'சாலிம் Uncle' என்றுதான் அவரை அழைக்கின்றனர். எங்களுக்கு அவரை டொக்டர் சலீம் (கவனிக்க: சாலிம் அல்ல - சலீம்) என்றுதான் பழக்கம். அப்படித்தான்அறிமுகம்.
எனக்கும் அவருக்குமான உறவு 20 ஆண்டுகள் நீளமானது. எனது வாழ்வில் சந்தித்த மிக முக்கியமான மனிதர்களுள் ஒருவர்.
உடன்பாடு, கூட்டுச் செயற்பாடு, கருத்தொருமிப்பு, கருத்து வேறுபாடு, களச் செயற்பாடு, வாதங்கள், மாற்றுக் கருத்துகள் என்று பல தளங்களிலும் என்னில் ஊடுபாவி நின்ற ஒரு ஆளுமை அவர்.
மிக நீண்ட காலம் வெளிநாடுகளில் பணிசெய்து விட்டு, 2000 ஐ ஒட்டிய காலப்பகுதியில் நாடு திரும்பினார். ஆபிரிக்காவிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்து விட்டு நாடு திரும்பிய அவர், கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன் கொழும்பில் அவரை தற்செயலாக ஒரு வீட்டில் சந்தித்தேன். கொஞ்சம் தளர்ந்து போயிருந்தார். "உங்களை ஒரு போட்டோ எடுக்கலாமா சேர்?" என்று கேட்டேன். "எடுங்கள்" என்றார். அந்தப் போட்டோவைத்தான் இங்கு இணைத்திருக்கிறேன்.
2000 களின் தொடக்கத்தில் நாங்கள் முஸ்லிம் மக்கள் செயலணி ( Muslim People's Action Front - MPAF) என்றொரு அமைப்பொன்றை உருவாக்கி இயங்கினோம். அதை உருவாக்கி இயங்குவதற்கு, கலாநிதி சலீம் மிக முக்கியமான தூண்டுதலாக இருந்தார்.
இளைஞர்களின் சமூகப் பங்களிப்பு குறித்து மிகவும் தீர்க்கமான நிலைப்பாட்டில் இருந்தார். ஒரு காலகட்டத்தில் எங்களது ஆதர்ச ஊக்கியாக இருந்தார்.
கலாநிதி எஸ்.ஏ. றணீஸ் (அக்கரைப்பற்று), சகோதரர் அப்துல் சலீம் (மூதூர்), பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் (காத்தான்குடி), முஜீபுர் ரஹ்மான் (மன்னார்), பரீஸ் (மூதூர்) என்று பலரும் மிக அர்ப்பணிப்போடு முஸ்லிம் மக்கள் செயலணியில் இயங்கினோம்.
MPAF பணிகளில், Dr.சலீம் ஒரு இளைஞனைப் போல துடிப்பாக எம்மோடு சேர்ந்து இயங்கினார். எங்களிடையே வித்தியாசமான விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள் நிகழ்ந்த காலம் அது.
அந்தக் காலகட்டத்தில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தது. அப்போது பன்னாட்டு மனிதாபிமான உதவி நிறுவனமான Muslim Aid ஐ, இலங்கையில் நிறுவுவதில் அவர் முக்கிய பங்கை எடுத்தார். அதற்கு நாங்களும் துணையாக இருந்தோம்.
கொழும்பிலுள்ள முன்னணி சிவில் சமூக நிறுவனங்களோடு அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது.
தானாக முன்வந்து பேசிப் பழகும் அவரது இயல்பு காரணமாக, கொழும்பிலுள்ள முக்கிய ஆளுமைகள் பலருடன் தொடர்புகளையும் நல்லுறவையும் வளர்த்துக் கொண்டார்.
Marga Institute எனும் நன்கறியப்பட்ட ஆய்வு நிறுவனத்திற்கு என்னை அவர்தான் அழைத்துச் சென்றார். அதன் பணிப்பாளர் கொட்பிறே குணதிலக்க உள்ளிட்ட அறிஞர் குழாத்தின் முன்னிலையில், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பேசினேன்.
பல்லின அறிவுஜீவிகள் நிறைந்த ஒரு சபையில் பேசி, அவர்களது கூர்மையான கேள்விகளுக்குப் பதிலளித்த அந்த நிகழ்வை மிகவும் பெறுமதியாக உணர்ந்தேன். எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அது. அதற்கு Dr.சலீம்தான் முழுமுதற் காரணியாக இருந்தார்.
என்னை அவர் மிகச் சரியாக அடையாளம் கண்டிருந்தார். நிறைய ஆலோசனைகள் சொல்வார்.
குறிப்பாக சிங்கள மக்களோடு அவரது தொடர்புகள் மிகவும் பலமாக இருந்தன. சமய, சமூக நல்லிணக்க செயற்பாடுகளிலும் சகவாழ்வு நடவடிக்கைகளிலும் மிக ஆர்வத்தோடு இயங்கினார்.
பௌத்த மதகுருக்களுடனான நல்லிணக்க உரையாடல்களில் மிகுந்த ஆர்வத்தோடு பங்கெடுத்தார்.
மஹாத்மா காந்தி நிலையத்தின் (Mahathma Gandhi Centre) தலைவராகவும் இருந்தார்.
கிராம ராஜ்யம் (Grama Rajya) மூலம், அடிநிலை மக்களுக்கு ஆளுகையில் பங்கெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று உறுதியாக நம்பினார்.
அவரும் அவரது நெருங்கிய நண்பரான சிரேஷ்ட ஊடகவியலாளர் அர்ஜுன ஹுலுகல்லவும் இது குறித்து விரிவாக எழுதியுள்ளனர்.
கலாநிதி சலீம் ஐலண்ட் பத்திரிகையில் பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது எழுத்துகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கப்பட வேண்டும்.
ஆழமான பார்வை கொண்டவர். நல்லாட்சி (Good Governance) என்ற எண்ணக்கருவை எங்களுக்கு அறிமுகம் செய்தவர். நவீன் குணரட்ணவின் CIMOGG நிறுவனத்தை (Civilian Movement for Good Governance) அவர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
எல்லா சமூகங்களோடும் இணங்கி வாழ வேண்டும். எல்லோருக்கும் இணக்கமான அரசியல் தீர்வுக்காக உழைக்க வேண்டும் என்ற விரிந்த பார்வையை என்னில் ஏற்படுத்தியவர்.
அவரோடு இணைந்து நாங்கள் பல நெடுந்தூரப் பயணங்கள் சென்றிருக்கிறோம்.
கடைசியாக நடந்த அக்கரைப்பற்று புத்தகக் காட்சிக்கு அவரைத்தான் பிரதம அதிதியாக அழைத்திருந்தேன். நேரில் வந்து அழைப்பு விடுப்பதாகவும் அவரிடம் சொல்லியிருந்தேன்.
ஆனால், எங்களை மீறிய காரணங்களால் அது சாத்தியப்படாமல் போய் விட்டது.
அவரது மகன் Amjad Mohamed-Saleem கூட ஒரு கலாநிதிதான். அவரும் சமூகப் பணிகளில் ஆர்வமும் அனுபவமும் உள்ளவர்.
இப்போது கலாநிதி சலீம் எம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டார். அவர் இனி இல்லை. அவரது Mission ஐ நாம் முன்டுக்க வேண்டும் என்று, அவரோடு இணைந்து இயங்கிய நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். அது உண்மைதான். முடிவுறாத நெடும் பணிகளைத்தான் நமது தோள்கள் சுமந்துள்ளன.
கலாநிதி சலீம் அவர்களது நற்செயல்களையும் சமூகப் பணிகளையும் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக.
Dr.சலீம்,
உங்களது ஜனாஸா தொழுகையிலோ நல்லடக்கத்திலோ கலந்து கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறேன். அதுதான் மனதை
சென்று வாருங்கள் டொக்டர்.
அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னித்து மிக உயர்ந்த சுவனத்தை அருள்வானாக என்று மனம் நிறையப் பிரார்த்திக்கிறேன்.
ஆமீன் யாறப்பல் ஆலமீன்.
சிராஜ் மஷ்ஹூர்
20.02.2023
Post a Comment
Post a Comment