கல்முனை மாநகர சபை நிதிப்பிரிவில் மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு நிதிப்பிரிவில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். இன்னும் பல மக்களின் வரிப்பணங்களும் மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மக்கள் கல்முனை மாநகர நிதிப்பிரிவில் தமது விசாரணைகளை மேற்கொள்வது பொருத்தமானதாக அமையும் என கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை ஊழல்களுக்கு எதிராக குரலெழுப்பிவந்த கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் தெரிவித்துள்ளார்.
இன்று (20) கல்முனையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இருந்த அதிகாரிகள், தொகுதி பாராளுமன்ற உறுப்பினர், சபையை ஆளும் கட்சியின் தலைவர் போன்றோர்களின் அனுசரணையுடனும், ஆசிர்வாதத்துடனும் ஊழலுக்கு துணை போனவர்களாக, ஊழல்களை செய்பவர்களாக இருந்தார்கள். சபை முதல்வர் அடங்கலாக பலரும் ஊழலுடன் தொடர்புபட்டவர்களாக இருந்துள்ளனர். இவர்களை பற்றி நான் சபை அமர்வுகளிலும், சபைக்கு வெளியே ஊடகங்களிலும் உண்மைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வந்தேன். இவ்வாறான செயல்களுக்கு எதிராக நான் குரலேழுப்பும் போது அவர்களுக்கு ஆதரவாக மௌனம் காத்த மாநகர சபை உறுப்பினர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இது பலத்த அவமானத்தை தந்துள்ளது என்பேன். இவர்களையும், இவர்களை விட பெரிய ஊழல்வாதிகளையும் மனிதாபிமானமில்லாமல் காப்பாற்றி வந்தவர்களுக்கு இது தலைகுனிவை உண்டாக்கியுள்ளது.
இது போன்று பல ஊழல்கள் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இடம்பெற்று வருகின்றது. அவற்றையும் முறையாக அடையாளம் கண்டு நீதியான விசாரணையை முன்னெடுத்து மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என கல்முனை மாநகர ஆணையாளரை கேட்டுக்கொள்கிறேன்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் செலுத்தப்படும் மக்களின் வரிப்பணம் கொள்ளையர்களினதும், திருடர்களினதும் வயிற்றுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. கல்முனை மாநகர சபையில் மலிந்து காணப்படும் அதிகார துஸ்பிரயோகங்கள், ஊழல் மோசடிகளை அரச உயர் அதிகாரிகள் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மக்களின் வரிப்பணங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனால் மக்கள் அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு கல்முனை மாநகர நிதிப்பிரிவுக்கு தமது வரி கொடுப்பனவுகள் சென்றடைந்துள்ளதா என்பது பற்றிய விசாரணைகளை மேற்கொள்வது பொருத்தமானதாக அமையும் என்றார்.
Post a Comment
Post a Comment