துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,000-ஐ நெருங்கியது. 7,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் 5,894 பேரும் சிரியாவில் குறைந்தது 1,932 பேரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை தெரிவித்தது.
துருக்கியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மீட்புப்பணிகளுக்குத் தடையாக உள்ளது. அதேபோன்று, நிலநடுக்கத்திற்கு முன்பிருந்தே, உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் சிரியா அகதிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு சிரியாவில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரியா அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தனர். இந்நிலநடுக்கத்தால் சிரியா அகதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
திங்கள் கிழமை அதிகாலை 4:17 மணியளவில் துருக்கியின் காசியன்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில், 17.9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்தது. துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக, அதில் உயிர் பிழைத்தவர்கள் கூறினர்.
துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவானது.
மீட்புப்பணிகள் தொடர்பான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: "எப்படி என் மகனைக் காப்பாற்றப் போகிறேன் என்று நினைத்தேன்"
துருக்கி - சிரியா நிலநடுக்கம்: "இடிபாடுகளில் குரல் கேட்கிறது, காப்பாற்ற யாரும் இல்லை"
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் - உலுக்கும் புகைப்படங்கள்
இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை
சிரியா நிலநடுக்கம்
பட மூலாதாரம்,AFP
படக்குறிப்பு,
மீட்கப்பட்ட குழந்தை
வட-மேற்கு சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பின் பிறந்த குழந்தையை மீட்புக்குழுவினர் கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு, அக்குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண் உயிரிழந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவருடைய தந்தை, உடன்பிறந்த 4 பேர் உள்ளிட்டோரும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர்.
இட்லிப் மாகாணத்தில் துருக்கிய எல்லைக்கு அருகாமையில் உள்ள நகரமான ஜின்டாய்ரிஸில் கட்டட இடிபாடுகளிலிருந்து அக்குழந்தை மீட்கப்பட்டது.
அக்குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சாலைகளில் வசிக்கும் மக்கள்
துருக்கி நிலநடுக்கம்
பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,
இஸ்கெந்தருனில் ஏற்பட்ட பாதிப்புகள்
பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கட்டடங்களுக்குள் செல்வதற்கே அஞ்சுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் சாலைகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தெற்கு ஹத்தாய் மாகாணத்தில் உள்ள இஸ்கெந்தருனில் சாலையின் ஒரு வரிசையில் உள்ள கட்டடங்கள் முழுவதும் இடிந்தன. தன்னுடைய நண்பர் ஒருவர் நிலநடுக்கத்தால் உயிரிழந்த நிலையில், தன் நான்கு நண்பர்களை காணவில்லை என பெண் ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் பலரும் உதவிக்குழுக்கள் அளிக்கும் சில பிரெட் துண்டுகள் மற்றும் தக்காளிகளை உண்டு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேரழிவை உணர்த்தும் செயற்கைக்கோள் படங்கள்
துருக்கி நிலநடுக்கம்
பட மூலாதாரம்,SATELLITE IMAGE ©2023 MAXAR TECHNOLOGIES
படக்குறிப்பு,
இஸ்லாஹியேவில் ஏற்பட்ட பாதிப்புகள்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பேரழிவை உணர்த்தும் புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகின.
நேற்று (பிப். 07) வெளியான இந்த செயற்கைக்கோள் படங்கள் துருக்கி தெற்கு நகரங்களான இஸ்லாஹியே, நுர்தாகி, டுஸிசி உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட சேதங்களை காட்டுகின்றன.
அதேபோன்று, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் பல்வேறு புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
சிரியா நிலநடுக்கம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
மீட்புக்குழுவினர் மீது கோபம்
தெற்கு துருக்கியில் உள்ள நுமுனே மாவட்டத்தில் அர்ஸு டெடியேக்வா என்ற பெண் ஒருவர், தன்னுடைய உறவினரின் குழந்தைகள் இருவர் இன்னும் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாக மீட்புக்குழுவினரை நோக்கி, "நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள்" எனக்கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தியதாக, பிபிசி துருக்கி நிருபர் ஃபண்டனூர் ஆஸ்டுர்க் தெரிவிக்கிறார்.
"நாங்கள் வெகுநேரமாக காத்திருந்தோம், ஆனால் யாரும் வரவில்லை. எங்களிடம் உள்ள உபகரணம் மூலம் நிலத்தைத் தோண்டவும் அனுமதிக்கவில்லை" என அந்த பெண் தெரிவித்தார்.
"இரு குழந்தைகள் அதில் சிக்கியுள்ளனர். அவர்கள் (இறந்து) போய்விட்டனர். அவர்கள் ஏற்கனவே போய்விட்டனர், உறுதியாக சொல்கிறேன். ஏன் மீட்புக்குழுவினர் விரைவாக வரவில்லை?" என அவர் கேள்வியெழுப்பினார்.
உயிரிழந்த கால்பந்து வீரர்
துருக்கி நிலநடுக்கம்
பட மூலாதாரம்,YENI MALATYASPOR
துருக்கி கால்பந்து வீரரான அஹ்மெத் ஈயுப் துர்கஸ்லானும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுள் ஒருவர். அவருடைய கால்பந்து அணி யெனி மலாடியஸ்போர் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
"எங்களுடைய கோல்கீப்பர் அஹ்மெத் ஈயுப் துர்கஸ்லான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்,"" என அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்பதிவில், "உங்களை நாங்கள் மறக்க மாட்டோம், நீங்கள் மிகச்சிறந்த மனிதர்," என பதிவிடப்பட்டுள்ளது.
28 வயதான துர்கஸ்லான், 2021ஆம் ஆண்டிலிருந்து ஆறுமுறை அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.
அழிவுக்கு மேல் அழிவை சந்திக்கும் சிரியா
Getty Images
சிரியாவில் இடிந்துவிழுந்த கட்டடம்
'டாக்டர்ஸ் வித்தௌட் பார்டர்ஸ்' (Doctors without Borders) அமைப்பின் பிரிட்டன் செயல் இயக்குநர் நட்டாலி ராபர்ட்ஸ், சிரியாவில் தங்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
"பேரழிவுக்கு மேல் பேரழிவு ஏற்பட்டுள்ளது. துருக்கியின் காஸியான்டெப் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான சிரியா அகதிகள் வலுவற்ற கட்டடங்களில் வாழ்கின்றனர். இதனால், இத்தகைய பேரழிவால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் தெரிவித்தார்.
இடிபாடுகளுக்குள் நீண்ட நேரமாக சிக்கியுள்ளவர்களுக்கு ஏற்படும் காயங்களால் அவர்களுக்கு சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பேரிடரைத் தொடர்ந்து காலரா உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவுகளால் பல மாதங்களுக்கு வடக்கு சிரியா பாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment