மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு




 


(சுகிர்தகுமார்)

  அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று(24) ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கத்தினரால் கையளிக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கத்தினால் கொள்வளவு செய்யப்பட்ட 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மருந்துப்பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
வைத்தியசாலைக்கு இன்று மாலை சென்ற ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கத்தின் உபதலைவர் எஸ்;.தர்மராஜா தலைமையிலான நிருவாகத்தினர் அபிவிருத்தி குழு செயலாளரும் ஓய்வு பெற்ற வைத்தியருமான சித்ரா தேவராஜனிடம் இன்று குறித்த மருந்து பொருட்களை கையளித்தனர்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உதவிச்செயலாளருமான வி.பபாகரன் வைத்தியாசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் யு.எம்.எல்.சக்கீல் மற்றும் வைத்தியர் குணாளினி சிவராஜ் உள்ளிட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினை கருத்திற்கொண்டு பொது அமைப்புக்கள் மற்றும் தனவந்தர்கள் மூலமாக வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான மிக அவசியமான மருந்துப்பொருட்களை பெற்றுக்கொடுக்குமாறு வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் கோரிக்கையினை முன்வைத்துள்ள நிலையில் இன்று குறித்த மருந்துப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேநேரம் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருந்துகளுக்கு தேவைகளும் அதிகரித்து வருவதாகவும் இதனைப் பெற்றுக்கொடுக்க சமூக அமைப்புக்கள் மற்றும் தனவந்தர்கள் முன்வருமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.