பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தலைவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், சில காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 79வது வயதில் துபாயில் காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு உடனடியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்சேவைகளுக்கான மக்கள் தொடர்புத்துறை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
முன்னாள் ராணுவ அதிபரின் குடும்பத்தினரும் அவர் அமிலாய்டோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்த நோயினால், உடலிலுள்ள புரத மூலக் கூறுகள் செயலிழந்து, நோயாளியின் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பர்வேஸ் முஷாரஃப் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வந்தார்.
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - குறைந்தது 32 பேர் பலி
பாகிஸ்தானின் கடைசி ராணுவ சர்வாதிகாரியாக அறியப்படும் பர்வேஸ் முஷாரஃபின் வாழ்க்கை கடந்த இருபது ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தது.
1999இல் நாட்டில் ஆட்சியைப் பிடித்த பிறகு, அவர் பல கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்து, மேற்கத்திய உலகுக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான சண்டையில் முன்னணியில் இருந்தார்.
ஆனால், அவரது அரசியல் கட்சி 2008 தேர்தலில் தோல்வியடைந்தது. நாட்டின் அரசமைப்பை சட்டவிரோதமாக இடைநீக்கம் செய்ததாகவும் அவசரகால நிலையை விதித்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர் ஆட்சிக்கு வந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசமைப்பை மீறியதற்காக நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
பர்வேஸ் முஷாரஃப் ஆகஸ்ட் 11, 1943ஆம் தேதியன்று டெல்லியில் உருது பேசும் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் 1947இல் இந்திய பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தனர்.
ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பிறகு, 1998இல் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப், முஷாரஃபை ராணுவ தலைமை அதிகாரியாக நியமித்தார். அடுத்த ஆண்டே முஷாரஃப் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்தார்.
பாகிஸ்தான் பர்வேஸ் முஷாரஃப்
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஒப்பீட்டளவில் மூத்த ஜெனரல்களுக்கு முன்னுரிமை அளித்து பர்வேஸ் முஷாரஃபுக்கு ராணுவ தலைமை வழங்கப்பட்டது. அவரைத் தேர்வு செய்தது நவாஸ் ஷெரீஃபுக்கு சிக்கலாகிவிட்டது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, சர்ச்சைக்குரிய சீர்திருத்தங்கள், காஷ்மீர் நெருக்கடி போன்ற காரணங்களால் நவாஸ் ஷெரீஃப் புகழ் அந்த நேரத்தில் சரிந்து கொண்டிருந்தது. அந்த ஆண்டு காஷ்மீரில் சில பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்று தோல்வியுற்றதால் பாகிஸ்தான் வெட்கப்பட்டது. மேலும், அனைத்து பழிகளும் ராணுவம் மீது விழுந்தது.
ராணுவ ஜெனரல் முஷாரஃபை மாற்ற நவாஸ் ஷெரீஃப் விரும்பியபோது, அப்போதைய ராணுவ தளபதி மிகவும் சாதுர்யமாக ஆயுத பலத்தின் மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலுக்குப் பிறகு, “பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு” அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆதரவு அளித்ததார். அது, அல்-கொய்தா, தாலிபன் ஆதரவாளர்களாக இருந்த அனைவருடனுமான மோதலைக் குறித்தது. அவர்களுடன் பாகிஸ்தான் ராணுவம் கூட்டணியில் இருப்பதாக நீண்ட காலமாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அமெரிக்காவின் அழுத்தத்தைச் சமாளிக்க பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்கள், அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய குரல்கள் என்று இரண்டையும் சமநிலையில் பேண முயன்ற அவரின் நிலை கயிற்றில் நடப்பதைப் போல மாறியது.
கூடவே ஆப்கானிஸ்தான் பிரச்னையும் இருந்தது.
அப்போது கூட்டாட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்த பழங்குடிப் பகுதிகள்(FATA) மூலம் ஆப்கனுக்குள் அல்-கொய்தா, தாலிபன் அனுதாபிகள் செல்வதைத் தடுக்க போதுமான அளவுக்குச் செயல்படவில்லை என்று நேட்டோ மற்றும் ஆப்கன் அரசாங்கத்தால் பர்வேஸ் முஷாரஃப் பலமுறை குற்றம் சாட்டப்பட்டார்.
2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்பட்டபோது, முஷரஃபின் செயல்பாடுகள் பற்றிய பல கேள்விகள் மீண்டும் எழுந்தன. பின்லேடன் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு அருகில் வாழ்ந்து கொண்டிருந்தார். மேலும் பல ஆண்டுகளுக்கு அவரைப் பற்றித் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக வெளியான தகவலை முஷாரஃப் மறுத்துக் கொண்டிருந்தார்.
நாடு தழுவிய எதிர்ப்பு
ராணுவத் தளபதியாகச் செயல்பட்டபோது அவர் அதிபராக இருந்தது குறித்த தகராறு உட்பட, ஜெனரல் முஷாரஃபின் பதவிக்காலம் நீதித்துறையுடனான இழுபறியால் குறிக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டில், அவர் அப்போதைய தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரியை பதிவி நீக்கம் செய்தார். இது நாடு தழுவிய எதிர்ப்புகளைத் தூண்டியது.
சில மாதங்களுக்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித் மற்றும் அதை ஒட்டியை மதரஸாவை முற்றுகையிட உத்தரவிடப்பட்டது. அதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடுமையான ஷரியா சட்டத்தை அமல்படுத்த லால் மஸ்ஜித் மத குருமார்களும் மாணவர்களும் ஆக்ரோஷமான பிரசாரத்தை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்குப் பதிலடியாக, பாகிஸ்தானி தாலிபன் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆயுதம் ஏந்தியவர்களின் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
முஷாரஃப் சகாப்தத்தின் முடிவுக்கான தொடக்கமாக, நாடு கடத்தப்பட்டிருந்த நவாஸ் ஷெரீஃப் 2007இல் திரும்பியது அமைந்தது.
முன்னாள் ராணுவ ஜெனரல் தனது ஆட்சியை நீட்டிக்க அவசர நிலையை பிரகடனம் செய்தார். ஆனால், அவரது கட்சி பிப்ரவரி 2008 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், லண்டன் மற்றும் துபாயில் தங்கியிருந்தபோது, உலகம் முழுவதும் அவர் வழங்கிய விரிவுரைகளுக்கு ஈடாக கோடிக்கணக்கான டாலர்களை சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், மீண்டும் ஆட்சிக்கு வருவதே தனது எண்ணம் என்பதை அவர் ஒருபோதும் மறைக்கவில்லை.
பாகிஸ்தான் பர்வேஸ் முஷாரஃப்
பட மூலாதாரம்,VIDEO GRAB
மார்ச் 2012இல், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வியக்கத்தக்க முறையில் பாகிஸ்தானுக்கு திரும்பினார். ஆனால், அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டார்.
அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியான 'ஆல் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்' எதிர்பார்த்ததைப் போலவே தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
2007இல் பெனாசிர் பூட்டோ தாலிபன்களால் படுகொலை செய்யப்பட்டார். அது பாகிஸ்தானை மட்டுமின்றி மொத்த உலகையுமே உலுக்கியது. அவருக்குப் போதிய பாதுகாப்பு வழங்காதது தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் அவர் விரைவில் சிக்கினார். 2010ஆம் ஆண்டு ஐ.நா விசாரணையில், ஜெனரல் முஷராஃப், முன்னாள் பிரதமரை பாதுகாப்பதில் “வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக” குற்றம் சாட்டப்பட்டார்.
அதே ஆண்டில், 2007இல் அரசமைப்பை இடைநிறுத்த அவர் எடுத்த முடிவுக்காக அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஆனால், நீண்ட காலமாக ராணுவம் ஆட்சி செய்த நாட்டில், வழக்கு விசாரணை அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. எனவே, முன்னாள் ஆட்சியாளரின் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அரசு அமைத்தது.
இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தது. இறுதியாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், முஷாரஃப் தேசத்துரோக குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் போனது. பர்வேஸ் முஷாரஃப் உடல்நலக் குறைவால் தற்போது உயிரிழந்துள்ளார்.
Post a Comment
Post a Comment