(வி.ரி. சகாதேவராஜா)
தமிழ் தேசிய பரப்பில் ஒருவரையொருவர் குறைகூறி வசைபாடும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும். தமிழ் தேசியத்தின் அடிப்படையில் ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்படவேண்டும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா காரைதீவில் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றுமுன்தினம் (5) ஞாயிற்றுக்கிழமை மாலை விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் காரைதீவு கிளைச் செயலாளர் க.செல்வப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்ஏ. சுமந்திரன் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக இலங்கை தமிழர் கட்சி சார்பில் காரைதீவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.
அங்கு மாவை சேனாதிராஜா மேலும் உரையாற்றுகையில்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பின் கீழ் தமிழரசுக் கட்சி சின்னத்தின் கீழ் அனைவரும் செயல்பட்டதால் கடந்த அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் வெற்றிவாகை சூடி வந்தோம். இம் முறை தமிழரசுக்கட்சி அதே சின்னத்தில் தேர்தலில் களமிறங்கி உள்ளது. நாங்கள் மேலும் மேலும் வசைபாடி கட்சிகளை பிரிக்காமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
கூட்டமைப்பு கட்சிகளை மாத்திரம் அல்ல சுயேச்சை அணிஙளை மாத்திரமல்ல தேவையேற்படின் அரச கட்சி என்றாலும் அவர்களை அரவணைத்து நாங்கள் நட்புரிமையோடு இணைந்து செயல்பட வேண்டும் .
அவர்களை வேறுபடுத்தி எதிரியாக பார்க்ககூடாது.
இம்முறை தேர்தல் பலத்த சவாலாக அமையப் போகின்றது.
எனவே நாம் தமிழ் தேசியத்தின் அடிப்படையில் ஒன்று இணைந்து தேர்தலில் நின்று அறிவையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ஆட்சி அமைக்க வேண்டும்.
யாரையும் பிரித்து பார்த்தல் கூடாது.
அடித்தளத்தை இடுகின்ற பொழுது அவர்களது உதவி நாட்டுக்கு கிடைக்கும். அதனிடையே ஊராட்சி மன்றத்துக்கான உதவிகளை நாங்கள் ஒற்றுமைப்பட்டால் அவர்களிடமிருந்து பெற்று எமது மக்களுக்கு சேவை செய்யலாம். மக்களையும் சிறந்த வாழ்க்கைக்கு மாற்ற வேண்டும் .
எனவே இலங்கை தமிழரசி கட்சியை வழமைபோல இம்முறையும் வெற்றியடையச் செய்ய நீங்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும். என்றார்.
Post a Comment
Post a Comment