( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் பிரபல சமூக சேவையாளருமான தேசமான்ய ரோட்டேரியன் எந்திரி வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி நேற்று(5) ஞாயிற்றுக்கிழமை காலை தைப்பூச நாளில் காலமானார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது காரைதீவு பிரதேச சபையின் கன்னி உப தவிசாளரான கிருஷ்ணமூர்த்தி பல சமூகநலப் பணிகளை ஆற்றியுள்ளார்.
இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியவராவார்.
யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி காரைதீவில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவராவார்.
மரணிக்கும் போது வயது 66 .
இவர் சாமுவேல் கம்பெனி, மாகா போன்ற பல தனியார் நிருமாண நிறுவனங்களில் திட்ட பொறியாளராக சுமார் 40 வருடங்களாக பணியாற்றியவர். இதைவிட பல பொதுநல அமைப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தனியான சேவையாற்றியவராவார்.
இவர் கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத் தலைவராகவும், காரைதீவு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உப தலைவராகவும், ரோட்டரி கழக உறுப்பினராகவும், காரைதீவு விவேகானந்த விளையாட்டு கழகத்தின் போஷகராகவும், பழமையான நேரு சனசமுக நிலையத்தின் தலைவராகவும் போசகராகவும் மற்றும் பல சமூகபொதுநல அமைப்புகளிலும் பிரதான பங்கு வகித்து அளப்பரிய சேவையாற்றியவராவார்.
மும் மொழிகளிலும் பரீட்சயமான அவர் மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்துள்ளார்.
அவரின் இறுதிச் சடங்கு இன்று(6) திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் வீட்டில் இடம் பெற்று காரைதீவு இந்துமயானத்தில் தகனக்கிரியை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment