பல கட்சிகளின் உருவாக்கமே முஸ்லிம்களின் ஒற்றுமையினை சீர்குலைத்தது




 


(எம்.என்.எம்.அப்ராஸ்)


முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியாக அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அவரது மறைவிற்கு பின்னர் பல முஸ்லிம் கட்சிகள் உருவாக்கப்பட்டதால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சீர்குலைந்து காணப்படுகின்றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நிந்தவூர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ஊடகவியலாளர் ஏ.பி.அப்துல் கபூர் தெரிவித்தார்.

நிந்தவூர் 12ம் பிரிவில் நேற்று (21) நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் பேசுகின்ற மற்றொரு சமூகமான தமிழ் சமூகம் அபிவிருத்தி அரசியலை புறந்தள்ளி உரிமை அரசியலை மட்டுமே முன்னுரிமைப்படுத்துவதனால் இன்று தமிழ் சமூகம் தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு தியாகங்களை செய்து வருகின்றது. ஆனால் முஸ்லிம் சமூகம் உரிமைகளை புறந்தள்ளி அபிவிருத்திகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு அரசியல் செய்வதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை சீர்குலைந்து காணப்படுகின்றது.

வழங்குவதற்கு முயற்சிக்கின்ற இத்தருணத்தில் பிரிவினையினை தவிர்த்து ஒற்றுமையினை மேலோங்கச் செய்வதன் மூலம் மாத்திரம்தான் முஸ்லிம்களினுடைய நியாயமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார ரீதியான நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காண முடிவதுடன் வட கிழக்கிலும் வடகிழக்குக்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம்களினுடைய இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முடியும். 


முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு எதிரே வருகின்ற தேர்தலில் முஸ்லிம்களின் தாய்க்கட்சியான முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் மாத்திரம் தான் ஏனைய கட்சிகளிள் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் அல்ல என்கின்ற செய்தியினை முழு உலகத்திற்கும் இளைஞர்களாகிய நீங்கள் தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சி.பைசால் காசிம் மற்றும் வேட்பாளர் ஆசிப் பைசால் உட்பட பெருந்திரளான இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.