பாறுக் ஷிஹான்
5 இலட்சம் ரூபா மீண்டும் வர்த்தகரிடம் ஒப்படைப்பு-இளைஞனின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்
வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றதுடன் காணாமல் போன 5 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டு மீண்டும் பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரச வங்கி ஒன்றிற்கு திங்கட்கிழமை(20) அன்று ரூபா 35 இலட்சம் பணத்தை வியாபார நடவடிக்கைக்காக வைப்பிலிடுவதற்கு வர்த்தகர் ஒருவர் சென்றிருக்கின்றார்.வங்கிக்குள் சென்று குறித்த தொகையை வைப்பிலிடுவதற்கு தயாரான நிலையில் தான் கொண்டு வந்திருந்த பணத்தொகையில் ரூபா 5 இலட்சம் காணாமல் சென்றுள்ளதை அறிந்துள்ளார்.இந்நிலையில் உரிய வங்கி மேலாளருக்கு அறிவித்து விட்டு வங்கியின் அருகில் இருந்த சிசிடிவி கமரா காணொளிகளை அவதானித்துள்ளார்.குறித்த காணொளியில் தவறவிடப்பட்ட பணத்தை ஒருவர் எடுத்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மறுநாளான இன்று(21) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றினை வழங்குவதற்காக பணத்தை தவறவிடப்பட்ட வர்த்தகர் வருகை தந்திருக்கின்றார்.அதே நேரம் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த பணத்தொகையை கண்டு எடுத்து சென்ற மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த இளைஞனும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு வருகை தந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
மேலும் 5 இலட்சம் ருபா பணம் காணாமல் போன உரிமையாளர் என குறிப்பிடப்பட்ட நபர் பொலிஸார் முன்னிலையில் தான் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்திருந்ததை அடுத்து கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் முன்னிலையில் காணாமல் போன பணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தவறவிடப்பட்ட பணத்தொகை பொலிஸார் முன்னிலையில் மீண்டும் பெற்றுக்கொண்ட வர்த்தகர் பணத்தை கண்டெடுத்து பொலிஸார் ஊடாக வழங்கிய இளைஞனை ஆரத்தழுவி நன்றிகளை தெரிவித்தார்.அத்துடன் பணப்பை தவறவிடப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நிலையில் குறித்த இளைஞன் எனது பணத்தை மீட்டுக்கொடுத்துள்ளார். இக்காலகட்டத்தில் இளைஞனை போன்றவர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் மனிதாபிமானம் உள்ள இவ்வாறான இளைஞனை போன்றவர்களை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவர் நன்றிகளை தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment