(எம்.என்.எம்.அப்ராஸ்)
75 வது ஆண்டு பவள விழாவாக சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கையர்கள் என்றுமில்லாதவாறு பட்டினியுடனும், இருளிலும் சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசிய உணவுப்பண்டங்களின் விலையேற்றம் காரணமாக நாடு பட்டினியுடன் தடுமாறிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தின மேடையில் நாட்டின் முதற்குடிமகனான ஜனாதிபதி பேச முடியாத அளவுக்கு புறமுதுகு காட்டி ஓடும் நிலைக்கு நாட்டின் நிலையை வங்குரோத்தாக மாற்றியுள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை மயில் சின்ன வேட்பாளர் நூருல் ஹுதா உமர் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மாளிகைக்காட்டில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, மக்கள் திரண்டு முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை பதவிவிலக கோரி போராடியதும் அந்த இடத்தை பின்கதவால் பல்வேறு சதிகளை செய்து அடைந்து கொண்ட ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு உதவிகளையும் தனது அரசியல் கொள்கைகளையும் கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வார் என்று நம்பப்பட்டது. இன்று அது தலைகீழாக மாறியுள்ளது. எமது நாட்டில் பெற்றோல் லீட்டர் 400 ரூபாய் என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது.
மின்சாரம், குடிநீர் போன்றவற்றில் தொடங்கி நாட்டில் எல்லாப் பொருட்களுக்கும் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையை நாம் அடைய காரணம் கடந்த காலங்களில் நாம் நாட்டை திருட்டு புத்தியுள்ள நிர்வாக ஆளுமையற்ற அனுபவம் இல்லாத அயோக்கியர்களின் கையில் ஒப்படைத்தமையே. தொடர்ந்தும் நாம் அந்த தவறை விட முடியாது. சிறியளவில் நாம் தெரிவு செய்யும் உறுப்பினர்களே பின்னாளில் இந்த திருட்டுக்களை செய்பவர்களாக மாறி விடுபவர்கள். பழைய கோட்பாடுகளை துறந்து தேர்தல் கால வெகுமானங்களுக்கு சோரம் போகாமல் மக்கள் சுயசிந்தனையுடன் வாக்களித்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்ல முன்வர வேண்டும்.
எதிர்கால சந்ததிகளின் எதிர்காலம் சிதைந்து போகும் நிலை இப்போது இலங்கையில் உருவாகியுள்ளது. இலங்கையின் இளம் சிந்தனையாற்றல் கொண்ட மூளைகள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. வங்களாதேஷிடம் கடன் வாங்கிய நாம் சோமாலியாவிடம் கடன் வாங்கும் நாள் தொலைவில் இல்லை. இப்படியான பொடுபோக்கான அரசாங்கத்திற்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்என்றார்.
Post a Comment
Post a Comment