தலை சாய்க்கவும் இடமில்லாமல் தவிக்கும் 4 ஆயிரம் குடும்பங்கள்





 உள்நாட்டுப் போரால் ஏற்கெனவே சீரழிவை சந்தித்துவருகிற சிரியாவின் ஜிண்டாய்ரிஸ் நகரில் 70 சதவீதம் கட்டுமானங்கள் தற்போது நடந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போயுள்ளன; சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் தலைசாய்க்கவும் இடமில்லாமல் தவித்து வருகின்றன.


உடல்களை மீட்கும் பணியிலும் இடிபாடுகளை அகற்றும் பணியிலும் மீட்பு பணியாளர்கள் காலநேரம் பார்க்காமல் ஈடுபட்டு வருகின்றனர். வடமேற்கு சிரியாவில் உள்ள ஜின்டாய்ரிஸ் நகரில் இடிபாடுகளில் சிக்கியுள்ள உயிர்களை காப்பாற்றுவதற்கான காலம் கடந்துவிட்டது. சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் சேர்த்து சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்த இப்பகுதி, தற்போது எதுவும் இன்றி வெறுமையாக காணப்படுகிறது. ஜின்டாய்ரிஸ் கவுன்சிலின் துணைத் தலைவர் யாசின் அல் நாசர், பிபிசி-யிடம் பேசும்போது நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 800 பேராவது மரணமடைந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.


"நகரின் 70 சதவீத பகுதிகள் அழிந்துவிட்டன. இது ஒரு பேரழிவு" என்று அவர் கூறுகிறார்.


4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறங்க இடம் இல்லாமல் தவிக்கின்றன.


"ஜிண்டாய்ரிஸ் தான் தற்போது என்னுடைய மிகப்பெரிய எதிரி. ஏனெனில் என்னுடைய குடும்பம் மொத்தத்தையும் நான் இங்கு இழந்துவிட்டேன் " என்று கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கூறினார் அப்துல்லா முகமது அல்- இசா.


"என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 17 பேரை நான் இழந்துவிட்டேன். இது மிகவும் கொடுமையானது. " என்று தெரிவித்த அவர், தன்னுடைய சகோதர்கள் வசித்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறினார்.


நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்த துருக்கி நிலநடுக்கம்

துருக்கி: நிலநடுக்கத்தை தாங்கி நிற்பதற்கு கட்டப்பட்ட கட்டடங்கள் தரைமட்டமானது ஏன்?

பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்

ஆணுறுப்பு முறிவு- விறைக்கும்போது நிகழும் இந்த பிரச்னைக்கு சிகிச்சைகள் என்ன?

தொடர்ந்து பேசிய அவர், "இடிந்த கட்டிடம் பிஸ்கட் போல் இருந்தது. அடித்தளம் மற்றும் சுவர்கள் அனைத்தும் பிஸ்கட் துண்டுகள் போல் இருந்தன. அனைத்தும் இடிந்து விழுந்துவிட்டன. இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை அடைய நாங்கள் மூன்று நாட்களுக்கு தோண்ட வேண்டியதாக இருந்தது. அவர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். சரியான நேரத்தில் உதவி வழங்கப்படவில்லை; போதுமான மீட்புக் குழுக்கள் இல்லை," என்றும் குறிப்பிட்டார்.


உள்ளூர் குழுக்கள் தங்களிடம் உள்ளவற்றை வைத்து சிறந்த முறையில் மீட்பு பணியில் ஈடுபட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவர் கூறினார். தற்போது, அப்பகுதியில் நிலவும் உறைபனியை தாங்கும் வகையில் தங்குமிடம் ஒன்றை அவர் தேடி வருகிறார்.


"நாம் ஏன் கூடாரத்தில் தங்கக் கூடாது என்று என் மகள் என்னிடம் தொடர்ந்து கேட்கிறாள். ஆனால், யாருமே எங்களுக்கு உதவி வழங்கவில்லை " என்று அவர் தெரிவித்தார்.


மத்திய ஜின்டாய்ரிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரழிவு


படக்குறிப்பு,

தங்குவதற்கு புகலிடம் கிடைக்காத பலர் குடும்பம் குடும்பமாக உறையும் குளிரில் வெட்ட வெளியில் தூங்குகின்றனர்.


டிரோன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில், நகரம் முழுவதும் கட்டிடம் இல்லாமல் எங்கும் இடிபாடுகள் மற்றும் கான்கிரீட் குவியல்கள் இருப்பது பதிவாகியுள்ளது.


" ஜின்டாய்ரிஸ் இந்த அளவு பாதிப்பை சந்தித்ததற்கு காரணம், அது துருக்கி எல்லை அருகில் நிலநடுக்க அபாயம் மிகுந்த பகுதியில் அமைந்திருப்பதுதான்," என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள முகமது, பிபிசியிடம் தெரிவித்தார்.



ஒரு பத்தாண்டுக்கும் மேலான உள்நாட்டுப் போரில் இந்த நகரம் ஏற்கனவே பலரது கைகளுக்கு மாறியுள்ளது. குர்திஷ் படைகள் தொடக்கத்தில் தங்களது எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக வடக்கு முழுவதிலும் இருந்து சிரியா ராணுவத்தை வெளியேற்றியது. பின்னர், துருக்கி தனது படைகளை இந்த பகுதிக்கு அனுப்பி, எல்லை அருகேயுள்ள பகுதிகளை வசப்படுத்தியது. ஜின்டாய்ரிஸ் தற்போது துருக்கிய ஆதரவு சிரிய போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அதன் குடியிருப்பாளர்களில் பலர் பல முறை இடம்பெயர்ந்துள்ளனர்.


"யுத்தம் காரணமாக இப்பகுதிக்கு இடம்பெயர்ந்த பலரும், ஒருநாள் நிச்சயம் தங்கள் இல்லங்களுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். அதனால், இங்குள்ள கட்டடங்களை உறுதியுடனும் பாதுகாப்பு அம்சங்களுடனும் அமைக்க அவர்கள் பெரிய அளவில் முயற்சிக்கவில்லை," என்று நாசர் கூறுகிறார். இவர் அந்நகரில் பேரிடர் குழு ஒன்றையும் நடத்தி வருகிறார்.


படக்குறிப்பு,

ஒயிட் ஹெல்மெட்ஸ் என்று அறியப்படும் சிரியன் சிவில் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் சடலங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


பலமான அடித்தளத்துடன் கட்டப்பட்ட ஒருசில கட்டிடங்களால் மட்டுமே நிலநடுக்கத்தை தாங்கி நிலைத்திருக்க முடிந்தது . சமீப காலமாக, சட்ட விரோத கட்டுமானங்களை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதற்கு போதுமானதாக அவை இல்லை. என்றும் அவர் தெரிவித்தார்.


தற்போது, அனைத்தையும் இழந்து வறிய நிலையில் உள்ள மக்கள், சுகாதாரமற்ற சூழல் ஆகிய நெருக்கடிகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.


சித்தர்கள் பிரதிஷ்டை செய்த பழனி கோவிலில் ஆகம விதிக்கு இடம் உண்டா? கருவறை நுழைவு பிழையா?

மனிதர்களுக்கு ஐம்புலன்கள் அல்ல, ஏழு புலன்கள் உள்ளன என்பது தெரியுமா?

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீசை ‘சுருட்டிய’ இந்தியாவின் தீப்தி சர்மா

"கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் வேலைசெய்யவில்லை. அவற்றில் 40-60 சதவீதம் வரை சேதமடைந்துள்ளன. " என்று குறிப்பிட்ட நாசர், நிலநடுக்கத்தால் கிணறுகளும் அழிந்துவிட்டதால், அவற்றையும் சார்ந்து இருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.


சண்டையின்போது அலெப்போவிலிருந்து ஜிண்டாய்ரிஸுக்குத் தப்பிச் சென்ற அபு ஈல்ஃப் தற்போது வீதியில் வசிக்கிறார். "நங்கள் வசித்த நான்கு மாடி குடியிருப்பு இடிந்துவிட்டது. அனைத்தும் தற்போது மண்ணோடு மண்ணாகிவிட்டது " என்று கூறிய அவர் நிலநடுக்கம் ஏற்பட தொடங்கியதும் கட்டடத்தில் இருந்து தனது மனைவி, குழந்தைகளுடன் எப்படி தப்பிக்க முடிந்தது என்பதையும் விவரித்தார்.


ஜிண்டாய்ரிஸ் கவுன்சிலின் துணைத் தலைவர் என்ற முறையில் எல்லா முனையிலும் சிக்கலை எதிர்கொள்கிறார் யாசின் அல் நாசர்.

படக்குறிப்பு,

ஜிண்டாய்ரிஸ் கவுன்சிலின் துணைத் தலைவர் என்ற முறையில் எல்லா முனையிலும் சிக்கலை எதிர்கொள்கிறார் யாசின் அல் நாசர்.


"நாங்கள் ஐந்து பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டோம். எனினும், 23 பேர் இறந்தனர், அவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்" என்று தெரிவித்த அவர், மக்கள் அனைவரும் சாலைகளில் படுத்து உறங்குவதாகவும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஒரு தங்குமிடம் கண்டுபிடித்து அவர்களை அங்கு தங்க வைத்துவிட்டு தான் தற்போது சாலையில் படுத்து உறங்குவதாகவும் கூறினார்.


ஆரிஃப் அபு முகமது போன்ற உயிர் பிழைத்த சிலர், நிலநடுக்கம் தாங்கள் அனுபவித்த எல்லாவற்றையும் விட மோசமானது என்று கூறுகிறார்கள்.


"மின்சாரம் இல்லை, எங்களுக்கு தண்ணீரோ சரியான உணவோ இல்லை. "வடக்கு சிரியாவில் உள்ள மக்கள் கடினமான காலங்களை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட இந்த சோகம் எங்கள் நம்பிக்கைகளை எல்லாம் பறித்துவிட்டது " என்று அவர் கூறுகிறார்.