"அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது".





 (க.கிஷாந்தன்)

" நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (08.01.2023) தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அக்கரப்பத்தனை லக்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

அத்தோடு, கட்சியின் பொது செயலாளர் எஸ்.பிலிப், பிரதி பொது செயலாளர் பா. கல்யாணகுமார், நிதி செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், உப தலைவர்களான ராஜமாணிக்கம், சிவானந்தன், தேசிய அமைப்பாளர் நகுலேஷ்வரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், பிரதி தேசிய அமைப்பாளர் டி.கல்யாணகுமார் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் தேசிய சங்கம் உருவாக்கப்பட்டது. அந்த கொள்கையின் அடிப்படையிலேயே சங்கம் தற்போதும் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு நான் அமைச்சராக பதவியேற்றேன். குறுகிய காலப்பகுதிக்குள் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையக மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தேன். அமைச்சராக நான் நேர்மையாக செயற்பட்டதால்தான் எனக்கு அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கி மக்கள் நாடாளுமன்றம் அனுப்பிவைத்தனர். மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக செயற்படமாட்டேன்.

நான் மற்றையவர்களைபோல வாயால் வடை சுடும் அரசியல்வாதி கிடையாது. சொல்வதை செய்து காட்டுவதே என் பழக்கம். அரசியலுக்கு வந்து சொத்துகளை இழந்துள்ளேன். மாறாக சேர்த்தது கிடையாது. எமது மக்களை முன்னேற்ற வைப்பதே எனது இலக்கு. மாறாக மக்களை வைத்து பணம் உழைக்க முற்படவில்லை.

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகின்றன. இதனை கொண்டாட முடியாது. ஏனெனில் மக்களின் வாழ்க்கை நிலை முழுமையாக முன்னேறவில்லை. இந்நிலைமையை இந்தியா, பிரிட்டன் மற்றும் இலங்கை அரசுகளுக்கு எடுத்துகூறுவதற்காக நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும். பெப்ரவரி 26 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டாவில் இந்நிகழ்வை நாம் நடத்தவுள்ளோம். ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எமது தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி அவர்களை முதலாளிகளாக்க வேண்டும்." - என்றார்.