சுயேட்சையில் களமிறங்க தமிழ் மக்கள் கருத்துரைத்துள்ளனர்





 (வி.ரி.சகாதேவராஜா)

 கல்முனை தமிழ் பிரதேசங்களில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சிகளை விடுத்து சுயேட்சையில் களமிறங்க தமிழ் மக்கள் கருத்துரைத்துள்ளனர்.

 கடந்த 14ஆம் தேதி சனிக்கிழமை கல்முனை அம்மன் கோவில் வீதியில் இடம் பெற்ற கூட்டத்தில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் . அங்கு மக்கள் மேற்படி அபிப்பிராயத்தை தெரிவித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்ததன் எதிரொலி மற்றும் கடந்த தடவை கருணா அம்மான் வாக்குகளை பெற்ற பின்பு மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு சென்றமை போன்ற பல விடயங்களை சுட்டி காட்டிய மக்கள் இம்முறை இந்த கட்சிகளை விடுத்து சுயேட்சையில் போட்டியிட வேண்டும் என்று கருத்தை தெரிவித்தனர்.

 இதனை அடுத்து கல்முனை இளைஞர் ஒன்றியம் இரட்டை வட்டாரமான கல்முனை பன்னிரண்டாம் வட்டாட மக்களின் அபிப்பிராயங்களை பெறும் கூட்டத்தை ஆலயங்களின் ஒலிபெருக்கி வாயிலாக பகிரங்கமாக அறிவித்து  நேற்று முன்தினம் மாமாங்க பிள்ளையார் ஆலய பல்தேவைக் கட்டிடத்தில் ஒன்றியத் தலைவர் ஆறுமுகம் நிமலன் தலைமையில் நடத்தியது .

அதன் போது அங்கு வருகை தந்த மக்கள் கல்முனை மாநகர சபைக்கு சுயேட்சையில் களமிறங்க வேண்டும். அதற்காக ஒரு நிர்வாக கட்டமைப்பு ஒன்றை அவசியம் ஏற்படுத்தவேண்டும் என்றும்  கருத்துரைத்தனர்.

அதன் பின்னர் சகல வட்டாரங்களுக்குமான வேட்பாளர்களை தெரிவு செய்வது என்றும் முடிவானது
.
 இதேவேளை, கல்முனை 12 ஆம் வட்டாரத்துக்கான ஒரு வேட்பாளராக சந்திரசேகரம் ராஜனும், சேனைக்குடியிருப்புப் பிரதேசத்தில் கே. செல்வராஜாவும், நீலாவணைப் பிரதேசத்தில் வே. அரவிந்தனும் மக்களால் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.