மூன்று வகையில் இது மோசமான தோல்வி,நியூசிலாந்துக்கு





 நியூஸிலாந்து கடந்த 20 ஆண்டுகளில் இப்படிப்பட்ட மோசமான முதல் 10 ஓவர்களை ஒரு நாள் போட்டியில் பார்த்திருக்கவில்லை. 


ஷமி, சிராஜ், ஹர்திக் என இந்தியப் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களை திணறடித்தனர்.


மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியாவிடம் இழந்தது ஒருபுறம் என்றால் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தோல்விகளுள் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.


9-ஆவது ஓவரில்தான் நியூஸிலாந்து அணி தனது முதல் பவுண்டரியை அடித்தது. முதல் பத்து ஓவர்களில் அடிக்கப்பட்ட ஒரேயொரு பவுண்டரி அதுதான்.


முதல் பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஒருநாள் போட்டி ஒன்றில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.  கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றாகப் பார்க்கப்படும் நியூஸிலாந்துக்கு இது பெருங்கறையாக அமைந்திருக்கிறது.



அந்த அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 11 ரன்களையே எடுத்திருக்கின்றனர். ஆறாவது ஏழாவது விக்கெட்டுகளில் ஆடியவர்கள் ரன்களை எடுக்கத் தவறியிருந்தால் நியூசிலாந்து அணி இன்னும் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும்.


15 ரன்களை எடுப்பதற்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்ததும் நியூசிலாந்தின் மோசமான புள்ளி விவரங்களுள் முதன்மையானது. இதற்கு முன் முதல் 5 விக்கெட்டுக்கு 18 ரன்களை எடுத்ததுதான் அந்த அணிக்கு மோசமான ரன் சேகரிப்பாக இருந்தது. இன்று அதையும் விடக் குறைவான ரன்களுக்கு முதல் 5 வீரர்களும் ஆட்டமிழந்துவிட்டனர்.


நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து எடுத்த 108 ரன்களை இந்திய அணி 179 பந்துகள் மீதமிருக்கையில் 21-ஆவது ஓவரிலேயே கடந்துவிட்டது. 


தாம் ஆடிய கடந்த 10 ஒருநாள் போட்டிகளிலும் பவர் பிளேயில் விக்கெட்டை எடுத்து சாதனை படைத்திருக்கிறார் முகமது சிராஜ். தற்காலத்தில் முக்கியமான பந்துவீச்சாளர்களுக்கும் கிடைக்காத பெருமை இது.



இந்தியாவின் பந்துவீச்சு எப்படி இருந்தது?

முதல் ஓவரை வீசிய முகமது ஷமி, ஃபின் ஆலெனை வீழ்த்தினார். ஒரு ரன்கூட எடுக்காமல் இருந்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது.


இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ், மூன்று ரன்களை மட்டுமே கொடுத்தார். இப்படியாகத் தொடர்ந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய நியூசிலாந்து ஆறாவது ஓவரில் ஹென்ரி நிக்கோல்ஸ் விக்கெட்டை எடுத்தார்.


ஏழாவது ஓவரின் இறுதியில், எதிரணியின் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தபோது வெறும் 10 ரன்களோடு களத்தில் இருந்தது நியூசிலாந்து. அடுத்தடுத்து, 10, 11 என்று அடுத்தடுத்த ஓவர்களில், டேவான் கான்வே, டாம் லேதம் ஆகிய நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுகள் சரசரவென விழுந்தன.


 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மிகவும் மோசமான நிலையில் நியூசிலாந்து அணி இருந்தது. இதனால் 50 ரன்களை அந்த அணி தாண்டுவதே கடினமாக இருக்கும் என்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்பட்டது.


11வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் இரண்டு ஃபோர் அடித்த  கிளென் பிலிப்ஸ், கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 140 ரன்கள் குவித்த மைக்கேல் பிரேஸ்வெல் உடன்  சரிவின் பாதையில் இருந்த அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  


முகமது சமி  வீசிய 18வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் ஃபோருக்கு அனுப்பிய மைக்கேல் பிரேஸ்வெல், 3வதாக வீசப்பட்ட ஷார்ட் லெந்த் பந்தை அடிக்க முயற்சித்தபோது, பேட்டில் பட்ட பந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷானிடம் தஞ்சமடைந்தது. இதனால் 22 ரன்களுடன் மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 56 ஆக இருந்தது. 



இதையடுத்து, கிளென் பிலிப்ஸ் உடன் மிட்செல் சான்ட்னர் ஜோடி சேர்ந்தார். இந்த அணி மேலும் விக்கெட் விழாத வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிடைத்த ஒருசில பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவும் அவர்கள் தவறவில்லை. இதனால் அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. 47 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். 30வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் வீசிய ஃபுல் லெந்த் பந்தில் மிட்செல் சான்ட்னர் ஃபோல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கிளேன் பிலிப்ஸும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஆட்டக்காரர்களும் ஒற்றை இலக்க ரன்களின் வெளியேறினர்.


34.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்த நியூசிலாந்து அணி 108 ரன்களை எடுத்தது.  இந்திய அணி தரப்பில் முகமது சமி மூன்று விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.