காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு !





 (நூருல் ஹுதா உமர்)


இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் நீண்டகாலமாக பராமரித்துவரும் காணிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் காணி அனுமதிப்பத்திரத்திற்காக விண்ணப்பித்தும் இதுவரை காலமும் கிடைக்கப்பெறாமல் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு இறக்காமம் பிரதேச செயலாளரின் வழிகாட்டலுடன்  செயலக காணிப் பிரிவினால் விஷேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துரிதகதியில் பொதுமக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் இனம்காணப்பட்டு அவர்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குறித்த காணிகளுக்கு முறையான அரச அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை - 03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்ட காலமாகக் குடியிருந்துவரும் மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ், காணி அனுமதிப் பத்திரங்கள்  வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு, விசேட அதிதியாக அம்பாரை மாவட்ட காணி ஆணையாளர் (மாகாணங்களுக்கிடைப்பட்ட) ஐ.எல். இப்திகா பானு கலந்து கொண்டதுடன் இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், கணக்காளர் றிம்ஸியா அர்சாட், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமீல், கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் எச்.பி.இந்திரசிறி யசரட்ண பண்டார, காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி. நிசம்மா உம்மா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. நிசார்தீன், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரிவிற்குரிய கிராம உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.