மலையக தியாகிகள் தினம்





 (க.கிஷாந்தன்)

 

மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் (10.01.2023) அன்று பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, கொமர்ஷல் லேக் பகுதியில் நடைபெற்றது. 

 

மலையக மக்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பிற்பகல் 03 மணிக்கு  பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகின.

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு கடந்த 2019 டிசம்பர் 15 ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

 

இதன்படியே ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2020 ஜனவரியில் மஸ்கெலியாவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. 2021ம் ஆண்டு பத்தனை சந்தியில் நடைபெற்றது. இம்முறை கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களும், மலையக புத்திஜீவிகளும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தியாகிகளின் உறவினர்களும், அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் கலந்து கொண்டனர்.