சர்வ மத கலாச்சார விழா




 


(வி.ரி. சகாதேவராஜா)


 மட்டக்களப்பு -  அம்பாறை மாவட்ட லயன்ஸ் கழகங்களின் ஏற்பாட்டில் சர்வ மத கலாச்சார விழா  மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் உள்ள மகாஓயா தம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.

 மட்டக்களப்பு அம்பாறை  லயன்ஸ் கழக கலாச்சார பிரிவு திட்ட இணைப்பாளர் லயன் துரைராஜசிங்கம்  ஆதித்தன் தலைமையிலான குழுவினர் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.

லயன்ஸ் கழக 306C மாவட்ட ஆளுநர் லயன் பெர்னாட் ஹம்லத் அதிதியாக கலந்து சிறப்பித்தார். கிழக்கு மாகாண லயன்ஸ்  கழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மகாஓயா தம்பிட்டிய மகாவித்தியாலயத்தில் நான்கு மதங்களையும் சேர்ந்த சர்வமத தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
 இந்த நிகழ்வில் சர்வ மத தலைவர்களின் ஆசியுரையும், மாணவர்களின்  கலாச்சார நிகழ்ச்சிகளும் மேடை ஏறின.

 இதேவேளை, அங்கு வந்திருந்த சுமார் 100 மாணவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

  இன நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் வளர்ப்பதற்கு இது போன்ற சமாதான  திட்டங்கள் வழிவகுக்கும் என்று கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

விழாவில் மகாஓயா தம்பிட்டிய மகா வித்யாலயம், புல்லுமலை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், உறுகாமம் முஸ்லீம்மகா வித்தியாலயம், ஆயித்தியமலை தமிழ் கலவன் பாடசாலை ஆகிய நான்கு பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்து சிறப்பித்தார்கள்.