அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் சுவாமி விவேகானந்தின் 161ஆவது ஜனன தின நிகழ்வுகள்





சுகிர்தகுமார்)


  சுவாமி விவேகானந்தின் 161ஆவது ஜனன தினம் இன்றாகும்.
 
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வலியுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.
காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என விரும்பியவரும் அவரே.

வேதாந்த கருத்துகளை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பதும் அவரது கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையுடையவர்.

இவ்வாறு சிறப்புமிக்க சுவாமி விவேகானந்தரின் 161ஆவது ஜனன தின நிகழ்வுகள் இன்று உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக இன்று அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பாடசாலையின் சமய குழுவினரின் ஏற்பாட்டில் பிரதி அதிபர் க.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழவுகளில் உதவி அதிபர் மதியழகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் முன்பாக நிறுவப்பட்டிருக்கும்  சுவாமி விவேனகானந்தரின் திருவுருவச் சிலைக்கு பிரதி அதிபர் மற்றும் உதவி அதிபர் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். இதன் பிற்பாடு தேவாரம் பாடப்பட்டு மங்கள ஆராத்தியும் காண்பிக்கப்பட்டது.

இங்கு சுவாமி விவேகானந்தர் தொடர்பான உரையினை மாணவி ஒருவர் வழங்கியதுடன் அவருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிறைவாக சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு தொடர்பில் ஓய்வு நிலை ஆசிரியர் க.கமலநாதன் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.