"மலையகத்தில் போதைப்பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது"





(க.கிஷாந்தன்)

 

"ஹொரன பெருந்தோட்ட நிறுவனம் தம்மிக்க பெரேராவுக்கு உரித்தானது, அவர்தான் இலங்கையின் நம்பர் வன் பணக்காரர், நாட்டை மீட்கப்போவதாக கூறியே அவர் நாடாளுமன்றம் கூட வந்தார். தோட்ட மக்களை முறையாக வழிநடத்தி அவர்களை பாதுகாக்காத தம்மிக்க பெரேரா, நாட்டை எப்படி மீட்பார்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அத்துடன், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிலாளர்களை, சிஐடியினரை களமிறக்கி அச்சுறுத்தும் செயலை தோட்ட நிர்வாகங்கள் உடன் நிறுத்த வேண்டும். இல்லையேல் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் ஜீவன் தொண்டமான் எச்சரித்தார்.

 

அட்டன் – கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் 04.12.2022 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

" ஹொரன பெருந்தோட்ட நிறுவனம், தொடர்ச்சியாக அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. தொழில் சட்டங்கள் மதிக்கப்படுவதில்லை. தொழிலாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இதற்கு இடமளிக்கமுடியாது.

 

மஸ்கெலியா கவரவில தோட்டத்தில் தொழிலாளர்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை ஒரு கிராம் கொழுந்தைக்கூட வெளியேற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம். கம்பனிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அது அவர்களுக்கே பாதிப்பு. தேயிலை ஏலத்துக்கு உரிய நேரத்தில் உற்பத்தியை வழங்காவிட்டால் அவர்கள்தான் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும். எனவே, எமது போராட்டம் தொடரும்.

 

இந்நிலையில் கவரவில தோட்டத்தில் சிஐடியினரை களமிறக்கி, தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் மிரட்டுகிறது. தொழிற்சங்க நடவடிக்கையை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முடியாது. ஆனாலும் அங்குள்ள தோட்ட அதிகாரி தனது தனிப்பட்ட பலத்தை பிரயோகிக்க முற்படுகின்றார். அதற்கு நாம் அஞ்சப்போவதில்லை. மலையகத்தில் பாடசாலைகளில் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகின்றது, இதனை தடுப்பதற்கு திராணியற்ற சிஐடிக்கு, தோட்டத்தில் என்ன வேலை?

 

அதேவேளை, சிவகுமார் என்ற தோட்டத்தொழிலாளி மின்சாரம் தாக்கி, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை.  ஆனால் தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூறாமல், உயிருக்கு பேரம் பேசுகின்றது. எனவே,  ஹொரன பிளான்டேசனுக்கு எதிராக எமது போராட்டம் தொடரும்." - என்றார்.