தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை





 (க.கிஷாந்தன்)

 

அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரச பெருந்தோட்டையாக்கத்திற்கும் (SLSPC) இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

 

கலந்துரையாடலில்  அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் காணப்படும் பல்வேறு விடயங்கள் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன.

 

அரச பெருந்தோட்டயாக்கத்தின் தலைவர் ஸ்ரீமால் விஜய்சேகர, அதன் பொது முகாமையாளர்  மற்றும் நிதி முகாமையாளர்  உடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி  தலைமையில் பன்வில பிரதேசத்தின் பணிப்பாளர் மோகனதாஸ், பன்வில பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம், மாத்தளை மாநில இயக்குனர்  கமலநாதன்,  ரங்களை இயக்குனர் ராஜா மற்றும் மாவட்டத் தலைவர்கள் குரூப் கமிட்டி தலைவர்கள்  அமைப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி,

 

இக்குழு கலந்துரையாடலில் தொழிலாளர்களுக்கு நீண்ட காலமாக செலுத்தப்படாத இருந்த ஊழியர் சேமலாப நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் அவர்களின் சேவை கால கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டம் இணைக்க பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதுடன் எமது வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பக் கட்டமாக 100 ஹெக்டயர் தேயிலை மீள்நடுகை மேற்கொள்ளவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டு இவ்வாரம் முதல் அதனை துரிதக் கதியில் செயல்படுத்தவும் கலாபொக்க மற்றும் கோமர தொழிற்சாலைகளை மீள் திறக்கவும் இணக்கம் காணப்பட்டதுடன்.

 

இப்பகுதிகளில்  உல்லாச பிரயாணிகள் அதிகமாக  வரும் பகுதிகளில் எமது இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் அவர்களின் சந்தை படுத்தலுக்கு தேவையான வசதிகளை  மேற்கொள்ளும் வேலை திட்டத்திற்கும் இணக்கம் காணப்பட்டது.

 

மேலும் தோட்ட முகாமைத்துவத்தினால் தான்தோன்றித்தனமாக அதிகரிக்கப்பட்டுள்ள கொழுந்து பறிக்கும் அளவை அத் தோட்டங்களில் உள்ள தோட்ட முகாமைத்துவமும்  கமிட்டியும் கலந்துரையாடி  தீர்மானிக்கவும் முடிவுகள் எட்டப்பட்டது.