மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யக்கோரி






 (வி.ரி. சகாதேவராஜா)

 வடக்கு கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யக்கோரி அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பெண்கள் ஒன்றியத்தினால் நேற்று  ஏற்பாடு செய்யப்பட்டது.

 அதில் பெண்களமைப்பின் உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புகள் இளைஞர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் " எமது வாழ்க்கை எமது உரிமை ""சுகாதார உரிமைகள் மனித உரிமைகள்" "பெண்களின் சுகாதார  உரிமைகளை உறுதி செய்" மக்களின் சுகாதார உரிமைகளை உறுதி செய்"   போன்ற சுலோகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கான  மகஜர்களை  அவர்கள்
மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் மற்றும் சென்றல்கேம் வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஆகியோரிடம்  கையளித்தனர்.

 வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு சாதாரண நோய் தொடக்கம்பாரிய சத்திர சிகிச்சை வரை சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்வது மக்கள் உரிமையாகும். குறிப்பாக மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்கின்ற பொழுது குறிப்பிட்ட அளவு அத்தியாவசியமான மருத்துவப் பொருட்களை கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கின்றார்கள். முக்கிய மருந்து பொருட்களை தனியார் வைத்தியசாலையிலோ அல்லது தனியார் மருந்தகங்களிலோ பணம் செலுத்தி பெற வேண்டி இருக்கிறது.
 நாய் பூனை மற்றும் பாம்பு தீண்டிய உபாதைகளுக்கு மருந்துகள் கிடையாது.
 எனவே அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .