"குரு பூஜையும் விழாவும்"





( வி.ரி.சகாதேவராஜா)

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் "குரு பூஜையும் விழாவும்"  நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று(18) ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இந் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் 
தலைமையில் நடைபெற்றது.

திருமுன்னிலை அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்
(ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயம் காரைதீவு )
 கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தார்.

  காலையில் கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆறுமுக நாவலரின் அழகிய ரத ஊர்வலம் ஆரம்பமாகியது.
முன்னதாக கண்ணகை அம்மன் ஆலயத்தில் நாவலரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு திருமுன்னிலை அதிதி சிவசிறி சண்முக மகேஸ்வர குருக்களால் பஞ்சாரத்தி காட்டி ஊர்வலம் ஆரம்பமானது. நந்திக் கொடிகள் சகிதம் அறநெறி மாணவர்கள் முன்னேவர பின்னால் அதிதிகள் மற்றும் ஆறுமுக நாவலரின் தேர் ஊர்வலம் வந்தது.

பிரதம அதிதி மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்   நாவலரின் திருவுருவப் படத்தை தாங்கி வந்தார்.

ஊர்வலம் நேராக சுவாமி விபுலானந்த மணி மண்டபத்தை அடைந்ததும், நாவலர் பெருவிழா நந்திக் கொடி ஏற்றி ஆரம்பமானது.

சமய ஆர்வலரான நாகராஜா சனாதனன் வழங்கிய ஆறுமுக நாவலரின் திருவுருவச் சிலை திரைநீக்கம் செய்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

 நாவலர் போல் அறநெறி மாணவர்கள் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள்
(வீரபத்திரர் சுவாமி ஆலயம்
காரைதீவு ),
சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள்
(நந்தவன சித்தி விநாயகர் ஆலயம்
காரைதீவு ),
சிவஸ்ரீ ந.பத்மலோஜசிவம்
(மகாவிஷ்ணு தேவஸ்தானம்
பெரிய நீலாவணை) ,
சிவஸ்ரீ சுபாஸ்கர சர்மா
(முருகன் ஆலயம்
நாவிதன்வெளி ) ஆகியோர் கலந்து கொண்டு நாவலர் பெருமானுக்கு வேதபாராயணம் ஓதி பஞ்சாராத்தி காட்டி வழிபட்டனர்.

சிறப்பு அதிதிகளாக
ஆ.சஞ்சீன்
(பிரதிக்கல்விப்பணிப்பாளர்,கல்முனை),
 வி.ரி.சகாதேவராஜா
(உதவிக்கல்விப்பணிப்பாளர்,சம்மாந்துறை) ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் விஷேட அதிதிகளாக ஒன்பது பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

அனைவருக்கும் நாவலர் படங்கள் நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அறநெறி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மேடையேறின.

ஏற்பாடுகளை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்  சார்பில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  கு. ஜெயராஜி மேற்கொண்டிருந்தார். கலாச்சார உத்தியோகத்தர் ந.பிரதாப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.