மினி சூறாவளி - 26 பாடசாலைகளுக்கு விடுமுறை





 (க.கிஷாந்தன்)

பதுளை மாவட்டத்தில் லுணுகலை, பசறை, நமுனுகுலை, எல்ல ஆகிய பகுதிகளில் நேற்று (07.12.202) இரவு முதல் பலத்த காற்று வீசுவதனால் அப்பிரதேசங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்று (08.12.2022) காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பசறை நமுனுகுலை வீதியில் 12ம் கட்டைப் பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினாலும், அதே வீதியில் அம்பலம் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையினாலும் பசறை பண்டாரவளைக்கான பிரதான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு, மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவ படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

ஹொப்டன் 19ம் கட்டை பெருந்தோட்ட பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீட்டில் பெண்ணொருவர் காயமுற்ற நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் லுணுகலை பொலிஸ் சோதனை சாவடியின் மேல் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த சோதனை சாவடி சேதமடைந்துள்ளது.

மேலும், லுணுகலையில் இருந்து ஜனதாபுர ஊடாக மடூல்சீமை செல்லும் வீதி ஜனதாபுர பகுதியில் வீதியில் மின்கம்பம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

அத்துடன் நமுனுகுலை பொலிஸ் நிலையத்தின் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதோடு, நமுனுகுலை பகுதியில் பம்பரகல பத்தன, கந்தசேன, இந்துகல, பிங்கராவ, கனவரல்ல ஆகிய பகுதிகளில் வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதோடு, சில வீடுகளுக்கு மேல் மரக்கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

பசறை பகுதியில் கோணக்கலை மேற்பிரிவில் வீடொன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த வீடு சேதமடைந்ததோடு அப்பகுதியிலும் சில வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.

மேலும் மீதும்பிடிய, எல்டப், டெமேரியா, மீரியபெத்த, கமேவெல, ஆக்கரத்தன்ன, பசறை நகர் ஆகிய பகுதிகளிலும் காற்றினால் கூரைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மடூல்சீமை, றோபேரி பகுதிகளில் வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.

அத்துடன் பசறையிலிருந்து இங்குருகடுவ செல்லும் வழியாக புத்தல செல்லும் வீதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இக்காற்றின் காரணமாக அன்றாட தொழிலில் ஈடுபடுவோரும் பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட தொழிலில் ஈடுபடுவோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இதேவேளை, இந்த மினி சூறாவளி காரணமாக சுமார் 26 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.