( வி.ரி சகாதேவராஜா)
ஒரு மரத்தினால் 12 பேர் சுவாசிக்கின்றார்கள்.அதாவது உயிர் வாழ்கின்றார்கள். எனவே ஒரு மரம் வெட்டப்பட்டால் 12 பேர் சுவாசிப்பதற்கு முடியாமல் இறக்க வேண்டி நேரிடும் என்பதை மறந்து விட வேண்டாம் .
இவ்வாறு சம்மாந்துறையைச் சேர்ந்த பசுமை மீட்சி இயக்கத்தின் தலைவி மின்மினி மின்ஹா தெரிவித்தார்.
மின்ஹா பசுமை மீட்சி பேரவையின் மாவட்ட கிளை அங்குரார்ப்பணவைபவமும், "செந்தூரம்" இதழ் விநியோகமும் நேற்றுமுன்தினம்(4) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றது .
11 வயது மாணவியான பாத்திமா மின்ஹாவின் தந்தையான பிரபல ஆய்வு எழுத்தாளர் ஐலீல் ஜீயின் ஏற்பாட்டில் இந் நிகழ்வுசம்மாந்துறை ரஹீம் பூட் ஹப் விடுதியில் இடம்பெற்றது.
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பேச்சு போட்டி அறிவிப்புபோட்டிகளில் வெற்றி பெற்ற மின்மினி மின்ஹா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பசுமை மீட்சி இளவரசி மின் மினி மின்ஹா தரம் 6 கல்வி கற்கின்ற சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலய அதிபர் எம்ஏ. ரஹீம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது .
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவி கல்விப் பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
அங்கு "செந்தூரம்" விநியோக நிகழ்வும் இடம்பெற்றது.
முக்கிய பிரமுகர்கள் பிரதிகளை பெற்று கொண்டனர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
ஒரு மனிதன் அழகுக்காக ரசனைக்காக மதிப்புக்காக பயனுக்காக மரங்களை நடுகின்றான் .ஆனால் உண்மையிலேயே இந்த மரங்கள்தான் உயிர்களை வாழ வைக்கின்றன.
இலங்கையில் மொத்தமாக மனிதன் சுவாசிப்பதற்கு 20 வீதமான அடர்ந்த காடுகள் தேவையாகின்றது. ஆனால் தற்பொழுது 18 வீத காடுகளே இருக்கின்றன. ஏற்கனவே இரண்டு வீத காடுகளை இழந்து இருக்கின்றோம்.
எனவே மரங்களை நாட்ட வேண்டிய கடமை மனிதர்களுக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.
ஒரு மரம் ஒரு வருடத்திற்கு 40 ஆயிரம் கலன் நீரை உள்வாங்கி வளிமண்டலத்திற்கு வெளியிடுகின்றது..
ஒரு மரம் ஒரு வருடத்திற்கு 6 தொன் காபனீரொக்சைட்டை உள்ளெடுத்து அதேயளவு ஒக்சிசனை வெளியிடுகின்றது.
அதனைத் தான் அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கின்றன.
ஆனால் நாங்கள் இப்படிப்பட்ட மரங்களின் பெறுமதியை அறியாமல் உலகமயமாதல் நகரமயமாக்கம் போன்ற காரணங்களால் அவற்றை அழித்து வருகின்றோம்.
உலகில் வருடம் ஒன்றுக்கு 13.2 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன.
அதாவது இலங்கையை போல் இரண்டு மடங்கு பரப்பளவு கொண்ட காடுகள் அழிக்கப்படுகின்றன.
இலங்கையின் மொத்த பரப்பளவு 6.5 மில்லியன் ஹெக்டேர் அதாவது 56ஆயிரம் ஏக்கர் பரப்பளவாகும். இதுபோல் இரண்டு மடங்கு என்றால் பாருங்களேன்.
உண்மையிலேயே இலங்கை போன்ற இரண்டு மடங்கு பரப்பளவு மரங்கள் உலகில் வருடம் ஒன்றுக்கு வெட்டப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு உலகளவில் 20 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன.
ஒரு செக்கனில் ஒரு மைதானமளவு இத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றது .
அம்பாறை மாவட்டத்தில் 37 வீதம் அடர்ந்த காடுகள் இருக்கின்றன. திருகோணமலை மாவட்டத்தில் 34 வீத காடுகள் இருக்கின்றன. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆக எட்டு வீத காடுகளே இருக்கின்றன. மரங்கள் இல்லாமல் எப்படி சுவாசிப்பது?.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மக்கள் சுவாசிப்பதற்கு கஷ்டப்பட வேண்டி வரும் .
மக்களுக்கு தேவையான மரங்களை நாங்கள் நட வேண்டும் எனவே தான் இந்த பசுமை இயக்கத்தை நான் முன்னெடுத்து இருக்கின்றேன்.
2023இல் ஒரு லட்சம் மரக்கன்றுகளை கிழக்கில் பாடசாலைகள் முதல் பொது இடங்களில் நடுவதற்கு திட்டமிட்டுள்ளேன்.அதற்காக கொழும்பு முதல் திருகோணமலை வரை சென்று உரிய அதிகாரிகளைச் சந்தித்து ஒப்புதலும் பெற்றுள்ளேன்.
இந்த புனித பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். என்றார்.
அதனைத் தொடர்ந்து அதிதிகள் பிரமுகர்கள் அனைவரும் மின்ஹாவை வாழ்த்தி பேசினார்கள். திறனொளி கலைமன்றத்தினரின் பாடல்களும் இடம் பெற்றன.
எழுத்தாளர் கலாபூஷணம் பரீதா இஸ்மாயில், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி காதர் , தபாலதிபர் அகமட் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் அனைவருக்கும் காலை ஆகாரமும் வழங்கப்பட்டது.
Post a Comment
Post a Comment