விவசாயிகளுக்கான வரப்பிரசாத திட்டங்கள்





நூருல் ஹுதா உமர்

2022 - 2023  கால பகுதிக்கான மகா போக நெற்செய்கையை முன்னிறுத்தி இரு முக்கியமான செயல் திட்டங்கள் காரைதீவு கமநல சேவை மத்திய நிலையத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைய விவசாயிகளுக்கான உர மானிய வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதே போல ஜனாதிபதியின் தூர நோக்கை உணர்ந்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் இம்மாவட்டத்தில் பிரத்தியேக முன்மாதிரியாக வரம்பு பயிர் செய்கை திட்டம் முன்னெடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது.

இரு வேலை திட்டங்களையும் காரைதீவின் 04 கண்டங்களையும் சேர்ந்த விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கின்ற வைபவம் காரைதீவு கமநல சேவை மத்திய நிலையத்தின் பொறுப்பாளரும், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம். சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பேராளர்களாக காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளர் அப்துல் ஹலீஸ், மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் சமந்த, மாகாண உதவி விவசாய பணிப்பாளர் ஆர். அழகுமலர் ஆகியோருடன் விவசாய போதானாசிரியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

எம். சிதம்பாநாதன் ஊடகங்கள் முன்னிலையில் பேசியபோது இரு வேலை திட்டங்களும் உண்மையில் ரொம்பவே பெறுமதியானவை, வரப்பிரசாதங்கள் என்றே கூறலாம். விவசாயிகள் இத்திட்டங்களின் முழுமையான உச்ச பலனை பெற வேண்டும் என்றார்.