மக்களின் பிரச்சினையை தீர்த்து வைத்த ஜீவன் தொண்டமான்




 


(க.கிஷாந்தன்)

 

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட புளியாவத்தை நகரில், மாட்டிறைச்சி கடை அமைக்க வேண்டாம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள புளியாவத்தை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ஜீவன் தொண்டமான் மதிப்பளித்துள்ளார்.

 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

 

புளியாவத்தை நகரின் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மாட்டிறைச்சி கடை அமைக்கப்படுவதால் புளியாவத்தை பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

 

ஆகையால் புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி விற்பனை கடை அமைக்க தடைவிதிக்க வேண்டும் என புளியாவத்தை பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இது தொடர்பில் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

 

அதேநேரத்தில் நோர்வூட் பிரதேச சபை ஊடாக புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடை ஒன்று அமைக்க கேள்வி (டெண்டர்) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

 

இதனடிப்படையில் மாட்டிறைச்சி கடை டெண்டருக்காக நோர்வூட் பிரதேச சபை 15 இலட்சம் ரூபாய் அறிவித்த நிலையில் நபர் ஒருவர் டெண்டருக்காக குறித்த பணத்தை பிரதேச சபைக்கு செலுத்தியுள்ளார்.

 

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, புளியாவத்தை பகுதிக்கு சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான், நோர்வூட் பிரதேச சபை விடுத்துள்ள மாட்டிறைச்சி கடைக்கான டெண்டர் அறிவித்தலை நிறுத்தி டெண்டருக்காக பெறப்பட்ட 15லட்சம் ரூபாவை உரியவரிடம் கையளிக்குமாறு  தவிசாளர் குழந்தை ரவி அவர்களுக்கு பணித்துள்ளார்.