"பின்தங்கிய" என்று நினைப்பது பலவீனமாகும்"





 ( காரைதீவு  சகா)


பின்தங்கிய பிரதேசம் என்று நாங்கள் நினைப்பது பலவீனம் என்று நான் கருதுகின்றேன் . பின்தங்கிய என்று நாங்கள் நினைத்தால் நாம் மேலும் பின்தங்கியே செல்வோம். எனவே சவால்களை எதிர்கொள்வதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும் .

இவ்வாறு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் என்.ரங்கநாதன் தெரிவித்தார்.

 நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியான சாதாரண தர பரீட்சையில் அதிசிறப்பு பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கின்ற விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அன்பழகன் பிரஜீத், ரவிச்சந்திரன் தனுஷா, பாலச்சுந்தரம் தனுக்ஷன் ,புஷ்பராஜா அபினேஷ் ஆகிய நான்கு மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

நாவிதன்வெளி கோட்டத்தில் அதிகூடிய நான்கு 9 ஏ சித்திகள் மட்டுமல்ல ,இப் பாடசாலையின் 86 வருடகால வரலாற்றில் முதல் தடவையாக இந்த அதிகூடிய சித்தி கிடைக்கப் பெற்றமைமையை பாராட்டி இப்பாராட்டு விழா நேற்று (28) பாடசாலையில் நடைபெற்றது.

  பாடசாலை அதிபர் சீ. பாலசிங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம். அமீர், பிரதி கல்வி பணிப்பாளர்களான திருமதி நிதர்சினி மகேந்திரகுமார்,  ஹைதர்அலி , அப்துல் மஜீத் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ,பிரதேச சபை உறுப்பினர் ரி. யோகநாயகன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.  

 அங்கு பிரதேச செயலாளர் மேலும் உரையாற்றுகையில்..

சிறப்பு சித்தி பெற்றது கர்வத்தை வரவழைக்கும்.
ஆனால் அதனை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது .இனி வருகின்ற உயர்தர பரீட்சை தான் பிரதானமானது. எனது வாழ்க்கை ஒரு பாடம். கொஞ்சம் தவறினால் உயரிய இடத்துக்கு செல்வதற்கு நாங்கள் பாரிய விலை கொடுக்க வேண்டி  வரும் . பாரிய முயற்சி எடுக்க வேண்டி வரும் .
எனவே இதே அதீத முயற்சியோடு நீங்கள் உயர்தரத்தைக் கடக்க வேண்டும் . என்றார்.
சிறப்பு சித்தி பெற்ற மாணவர்கள் தங்கப் பதக்கம் மற்றும் நினைவு சின்னங்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்த சிரேஸ்ட ஆசிரியர் ந.கோடீஸ்வரன் தொகுத்தளித்தார்.

இதேவேளை அங்கு பரராஜசிங்கம் நிலக்ஸா , தேவகுமார் பிரனிதா ஆகியோர் 8 ஏ பி சித்திகளை பெற்றுள்ளனர்.மேலும் பலர் 7 ஏ 5 ஏ எனச் சித்திகள் பெற்றிருந்தனர்.

 அங்கு தோற்றிய 30 மாணவர்களுள் 22 மாணவர்கள் கணிதம் மற்றும் தமிழ் பாடங்களுடன் சித்தி  பெற்றுள்ளார்கள்.மீதி 08  மாணவர்கள் கணிதம் அல்லது தமிழ் பாடங்களுடன் சித்தி  பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.