புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்




 


10 வருட கனவு நிறைவேறிய நாள்; புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சந்தோஷத்தில்


அபு அலா -


கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அபிவிருத்தி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் தேவைகளையறிந்து பல்வேறுபட்ட உதவிகளை இலங்கை காப்போம் நிறுவனம் வழங்கி வருகின்றது.


அதற்கமைவாக, திருகோணமலை - வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற 235 குடும்பங்களில் 25 குடும்பங்கள், சுமார் 10 வருங்களாக பாலமின்றி பல கஷ்டங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவ்விடயத்தை இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரனின் (திலீப்) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து உப்புவெளி பிரதேச சபையும், இலங்கை காப்போம் நிறுவனமும் இணைந்து 5 இலட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்பட்ட பாலம் (23) திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.


இலங்கை காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.ஆர்.பிரவினா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.எ.எஸ்.ரீ.ரத்நாயக்க மற்றும் காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பாவனைக்கும் கையளித்து வைத்த அதேவேளை அக்குடும்பங்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.


கடந்த 10 வருங்களாக பாலம் ஒன்று இல்லாமல் இங்குள்ள 25 குடும்பங்களும், பாடசாலைக்குச் செல்லும் எங்களது பிள்ளைகளும் பல கஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்தோம். குறிப்பாக, மழை காலங்களில் சொல்ல முடியாதளவு பாரிய சிரமங்களை அன்றாடம் எதிர்கொண்டு வந்துள்ளோம் என்று அங்கு வாழ்கின்ற குடும்பங்கள் தெரிவித்தனர்.


நாங்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து எங்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றவர்களாகவும், இருப்பதற்கு ஒழுங்கான வீடுகளும் இல்லாத நிலைமையில்தான் வாழ்ந்து வருகின்றோம். எங்களின் நிலைமையை இலங்கை காப்போம் நிறுவனத்திடம் எடுத்துச் சொன்னபோது, அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து இப்பாலத்தை நிர்மானித்து இன்று எங்களின் பாவனைக்கு கையளித்து வைத்துள்ளனர். இப்பாலத்தை நிர்மானித்துத்தர உதவி புரிந்த அனைத்து உங்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.


இலங்கை காப்போம் நிறுவனம் இனமத மொழி வேறுபாடுகளுக்கப்பால் மக்களின் தேவைகளையறிந்து அவர்களால் இயன்றளவு உதவிகளை உடனடியாக வழங்கி வருகின்றதொரு நிறுவனமாக கடந்த சுனாமி அனர்த்தத்தின் பிற்பட்ட காலங்களில் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வுக்கு உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.விபுசன், வி.பாபுகாந், கிராம சேவகர் எம்.பிரசாந்தினி, உப்புவெளி பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர், நிருவாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.