கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா, சௌதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஆரம்பத்தில் கரகோஷங்களுடன் தங்கள் அணியின் அதிரடியைப் பார்க்க ஆவலோடு இருந்த ரசிகர்களின் முகங்கள் ஆட்ட இறுதியில் வாடிப் போயிருந்தன.
லொசைல் மைதானத்தில் மெஸ்ஸி நுழைந்தபோது அர்ஜென்டினா ரசிகர்கள் கரகோஷங்களுடன் தங்களது அணியை வரவேற்றனர். அவர்களுக்கு நிகராக போட்டி போட்டுக்கொண்டு சௌதி அரேபிய அணியின் ரசிகர்களும் கோஷமிட்டு ஆட்டத்தைத் தொடக்கி வைத்தனர்.
உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடக்கவுள்ள இடத்திலேயே அர்ஜென்டினா தனது 36 ஆண்டுகால கனவை அடைவதற்கான முதல் ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே மெஸ்ஸி இறங்கி ஆடி கோல் அடிக்க முயன்றார். ஆனால் சௌதி அணியின் கோல் கீப்பர் முகமது அல் ஒவைஸ் மெஸ்ஸி அடித்த பந்தைத் தடுத்து நிறுத்தினார்.
அதைத் தொடர்ந்து வந்த ஒரு ஃப்ரீ கிக்கை அடித்த பிறகு, 10வது நிமிடத்தில் நடுவர் அது பெனால்டி என்று கூறவே, அர்ஜென்டினாவுக்கு ஒரு பெனால்டி கிடைத்தது.
அதில் மெஸ்ஸி இந்த உலக கோப்பை போட்டிக்கான முதல் கோலை அடித்தார். இது அவர் உலகக் கோப்பை போட்டிகளில் அடித்துள்ள ஏழாவது கோல்.
அதைத் தொடர்ந்து மெஸ்ஸி ஒரு கோலும் லௌடாரோ மார்ட்டினெஸ் இரண்டு கோல்களையும் அடித்தனர்.
ஆனால் அது ஆஃப் சைட் என்பதால் கோல் கணக்கில் வரவில்லை. ஒருபுறம் ஆஃப்சைடாகவே இருந்தாலும் தொடர்ந்து மூன்று கோல்கள் வலைக்குள் சென்றது சௌதி ரசிகர்களுக்கு பதட்டத்தைக் கொடுத்தது.
அதேநேரத்தில், அர்ஜென்டினா ரசிகர்களைப் பொறுமையிழக்கச் செய்தது.
கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா இந்த முறை கைப்பற்றுமா? – மெஸ்ஸியின் ஃபார்ம் எப்படி உள்ளது?
22 நவம்பர் 2022
கத்தார் 2022: இரானை வீழ்த்திய இங்கிலாந்து - தொடக்க ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய வீரர்கள்
21 நவம்பர் 2022
கத்தார் 2022: தேசிய கீதம் பாடாத இரானிய வீரர்கள் - இதுதான் காரணம்
21 நவம்பர் 2022
முதல் பாதியில் சௌதி அணி தற்காப்பு ஆட்டத்தையே கையாண்டு கொண்டிருந்தது. தொடர்ச்சியான ஆஃப் சைடுகள் வந்த பிறகு, மெஸ்ஸி அணியின் ஒருங்கிணைப்பு முதல் பாதியின் இறுதியில் சற்று தவறியது.
அந்த நேரத்தில் தனது கோலை அடிக்க முயன்ற சௌதி அரேபியாவை எமிலியானோ மார்ட்டினெஸ் தடுத்து நிறுத்தினார்.
முதல் பாதியில் கால்பந்தில் பொருத்தியுள்ள சிப் மூலம் பயன்படுத்தப்பட்ட விஏஆர் தொழில்நுட்பமே சௌதியை மூன்று கோல்களில் இருந்து காப்பாற்றியது.
ஆகவே, அவர்கள் மீது அர்ஜென்டினா முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது.
ஆரம்பத்திலேயே சௌதி அரேபியா அணிக்கு 15வது நிமிடத்தில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. ஆனால், அர்ஜென்டினாவின் கோல் போஸ்ட் பக்கம் கொண்டு செல்ல விடாமல் லியாண்ட்ரோ பரேடெஸ் தடுத்து நிறுத்தினார்.
முதல் பாதி முடிவின்போது, அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் ஒரு கோலுடன் முன்னிலையில் இருந்தது.
இது அமெரிக்காவுக்கும் வேல்ஸுக்கும் இடையிலான ஆட்டத்தில் இருந்த அதே நிலையாக இருந்ததாலும், ஆட்டம் டிராவில் முடிவதற்கான வாய்ப்புகள் இருந்ததாலும் ரசிகர்களிடையே பதட்டம் நிலவியது.
ஆனால், இரண்டாவது பாதி தொடங்கியபோதே அப்படியெல்லாம் டிரா ஆக விடமாட்டோம், வென்றுவிட்டுத்தான் போவோம் என்பதைப் போல் அதிரடியாக ஆடத் தொடங்கியது சௌதி அணி.
இரண்டாவது பாதியின் தொடக்கத்தில், இரண்டு கோல் வித்தியாசத்தில் முன்னிலைக்கு வந்தாக வேண்டும் என்ற நிலை அர்ஜென்டினாவுக்கு இருந்தது.
சௌதி அரேபியா மூன்று ஆஃப் சைடுகளுக்குப் பிறகு தனது கோல் போஸ்ட் பக்கம் வரவிடாமல் எதிரணியைத் தடுத்து நிறுத்தப் போராடினாலும், அர்ஜென்டினாவின் தற்காப்பு பலமாக இருந்ததால் கோல் அடிக்க முடியவில்லை.
தனது அண்டை நாட்டில் விளையாடிக் கொண்டிருந்த சௌதிக்கும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்ற அழுத்தம் இருந்தது. அந்த அழுத்தத்தைப் போக்கும் வகையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 48 நிமிடங்களில் சாலே அல் ஷெஹரி சௌதிக்கான முதல் கோலை அடித்தார்.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை
பட மூலாதாரம்,GETTY IMAGES
தகுதிச் சுற்று போட்டிகளில் சௌதியில் அதிக கோல்களை அடித்த அல் ஷெஹரி அவருடைய அணிக்கான 2022 உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார். அவரைத் தொடர்ந்து சௌதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 53வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார் சேலம் அல் டாசரி.
அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி இரண்டு கோல்களை அடித்து முன்னிலையில் இருந்தனர். முதல் பாதியில் சௌதி மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த அர்ஜென்டினா மீது, சௌதி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
சௌதி ரசிகர்களால் செல்லமாக டொர்னாடோ என்று அழைக்கப்படும் அல் டாசரி உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்திருந்ததால், இந்தப் போட்டியில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் நிலவியது.
ஆனால், போட்டியில் கலந்து கொண்டது மட்டுமின்றி, முதல் ஆட்டத்திலேயே அணியினருக்கு நம்பிக்கையூட்டும் விதமாக முக்கியத்துவம் வாய்ந்த கோல் ஒன்றையும் அடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 15 வயதிலிருந்து ஒன்றாக விளையாடி வரும் மெஸ்ஸிக்கும் டி மரியாவுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு தெரிந்தது. ஆனால், அவர்களை கோல் அடிக்கவிடாமல் இரண்டாவது பாதியில் அல் ஒவைஸ் தொடர்ந்து தடுத்துக் கொண்டே இருந்தார்.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை
பட மூலாதாரம்,GETTY IMAGES
1998ஆம் ஆண்டில் அர்ஜென்டினா கேமரூனுக்கு எதிராகத் தோற்றதைப் போன்ற ஒரு காட்சி நிகழப் போகிறோதோ எனத் தோன்றியது. சௌதி அரேபியா அணி அர்ஜென்டினாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடிக்கும் என்று கணிக்கப்படவே இல்லை. அர்ஜென்டினாவுக்கு இது எதிர்பாராத பின்னடைவாக இருந்தது.
அர்ஜென்டினா அணிக்கு 80வது நிமிடத்தில் ஒரு ஃபீர் கிக் கிடைத்தது. மெஸ்ஸி வழக்கமாக அடிக்கக்கூடிய வகையிலான பொசிஷனில் அந்த ஃப்ரீ கிக் அமைந்தது. ஆனால், அதை அவர் சரியாக அடிக்காததால் கோல் அடிப்பதற்கான வாய்ப்பு அர்ஜென்டினாவுக்கு பறி போனது.
ஆட்டத்தின் இறுதியில் 84வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு கோல் அடிப்பதற்கான மற்றுமொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெஸ்ஸி அடித்த ஹெடர் அருமையாக இருந்தபோதிலும் அல் ஓவைஸ் திறம்பட அதைத் தடுத்தார்.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை
பட மூலாதாரம்,GETTY IMAGES
கூடுதலாகக் கொடுத்த 8 நிமிடங்களில் கோல் போஸ்டுக்கு வந்த பந்தைத் தடுப்பதற்காக அல் ஒவைசி எகிறியபோது அவருடைய முழங்காலில் மோதிய யாசரின் முகத்தில் பலமான காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் கூடுதலாக 8 நிமிடங்கள் தரப்பட்டன.
முதல் பாதியின்போது மொத்த கவனமும் அர்ஜென்டினா மீது இருந்தது. இரண்டாவது பாதியில் அதை மொத்தமாகத் தன் பக்கம் திருப்பிக் கொண்ட சௌதி இறுதி வரை தனது வரலாற்றுத் தருணத்தைத் தக்க வைத்துக் கொண்டது. சௌதியின் கோல் கீப்பர் அல் ஒவைஸ் தன் பக்கம் வந்த அனைத்து கோல்களையும் தடுத்தார்.
இறுதி வரை போராடியும் இரண்டாவது பாதியில் சௌதியின் அதிரடி ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் அர்ஜென்டினா வீரர்கள் தவித்தனர். ஆசிய நாடான சௌதி அரேபியா, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. சௌதிக்கு இதுவொரு முக்கியமான தருணம்.
தங்களால் வெற்றியடைய முடியாது என்று பலராலும் கணிக்கப்பட்ட ஓர் ஆட்டத்தில், தென்னமெரிக்காவின் கால்பந்து அணி மற்றும் உலக கால்பந்து ஜாம்பவான்களில் ஒன்றான அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்பந்து உலக கோப்பை வரலாற்றில் செளதி சாதனை படைத்துள்ளது.
Post a Comment
Post a Comment