இஸ்லாமிய பொருளாதாரம், நிதிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டும்




 


நூருல் ஹுதா உமர்)


இஸ்லாமிய பொருளாதாரம், நிதிகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டும் என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தில் பட்டபின் படிப்பினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (08) இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் பல்கலைக்கழக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் இஸ்லாமிய நிதிகள் சம்பந்தப்பட்ட சில பொறுப்புகள் காணப்படுகின்றன. ஆகவே ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்புகளை செய்ய வேண்டியுள்ளது.

இலங்கையில் 2.4 மில்லியன் சனத்தொகை காணப்படும் நிலையில், 22 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படும் போது, தற்போது வெறும் 5 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் தான் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக 2 ஆயிரம் ஆராய்ச்சியாளர்களே நடைமுறை ஆராய்ச்சியாளர்களாக இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு  உந்து சக்தியாக பங்களிப்பு செய்ய கூடிய வகையில் ஆராய்ச்சிகள் இருக்கவேண்டுமென உபவேந்தர் கல்வியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்தியா உட்பட பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் ஆராய்ச்சியாளர்கள் குறைவாக உள்ளதை வெளிப்படுத்திய அவர், இலங்கையில் Master of Philosophy (Mphil) மற்றும் Doctor of Philosophy (PhD) போன்ற பட்டப்பின் படிப்பின் மூலம் அதிக ஆராய்ச்சியாளர்களை உருவாக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது பணியை ஆரம்பித்துள்ளதுடன் எதிர்காலத்தில் பல மைல்கற்களை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்


UMAR LEBBE NOORUL HUTHA