ஒருநாள் வைத்திய சேவை திட்டத்திற்கு கிழக்கில் தெரிவு




 


(வி.ரி.சகாதேவராஜா)


உலக சுகாதார ஸ்தாபன  வைத்திய நிபுணர்கள்  நேற்றுமுன்தினம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர்.

ஒரு நாள் வைத்திய சேவை முறையை ( Day care system) இவ் வைத்தியசாலையில் முன்னெடுப்பதற்கான சாத்தியவள அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு மேற்படி குழுவினர் அங்கு விஜயம் செய்தனர்.

இவ் விஜயத்தில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி 
அமெரிக்க டுக் பல்கலைக்கழக பேராசிரியர் வைத்தியகலாநிதி சியுங்கிர்ல் 
அஹ்ன் மற்றும் நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் களனிப்பல்கலைக்கழக 
பேராசிரியர் வைத்தியகலாநிதி செகான் வில்லியம்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்களை கல்முனை ஆதாரவைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் வரவேற்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் '
"ஒரு நாள் வைத்திய சேவை முறைமை "(Day care system)  நிகழ்ச்சி 
திட்டத்திற்கு கிழக்கு மாகாணத்திலிருந்து கல்முனை வடக்கு ஆதார 
வைத்தியசாலை மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை 
நடைமுறைப்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் 
செயற்பாடுகளுக்காக உலக சுகார அமைப்பின் பிரதிநிதிகள்
வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றினை  மேற்கொண்டிருந்தார்கள்.

 இதன் போது,
நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே 
அவருக்கான சகல மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு குறித்த 
நாளிற்குள் வீடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வது அதன் நோக்கமாகும்.

அதன் மூலம் 
நோயாளியின் மனநிலை மிகச் சிறப்பாக அமைவதோடு அரசாங்கத்திற்கு 
ஏற்படும் மேலதிக விரயங்களும் தவிர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக 
வைத்திய அத்தியட்சகர்  டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையிலான வைத்திய 
நிபுணர் குழாம் மற்றும் பொறுப்பு அதிகாரிகளினால் பல சாதகமான 
கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு பல பின்னூட்டல்களும் 
வழங்கப்பட்டன. 

இந் நிகழ்வில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி 
அமெரிக்க டுக் பல்கலைக்கழக பேராசிரியர் வைத்தியர். சியுங்கிர்ல் 
அஹ்ன் மற்றும் நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் களனிப்பல்கலைக்கழக 
பேராசிரியர் வைத்தியர். செகான் வில்லியம்ஸ் ஆகியோர் 
கலந்துகொண்டு வைத்தியசாலை நடைமுறைகளை பார்வையிட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் தரமானதும் வினைத்திறனானதுமான வைத்திய 
சேவையை முன்னெடுப்பதன் காரணமாகவே இவ் வைத்தியசாலையை 
இந் நிகழ்ச்சி திட்டத்திற்கு தெரிவு  செய்ததாக உலக சுகாதார நிறுவனம் நிபுணர்கள் தெரிவித்தனர்.