(க.கிஷாந்தன்)
கனேடிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சிலோன் யூத் மூவ்மெண்ட் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டம் ஆகியன இணைந்து மலையகத்தில் முதன்முறையாக சமூக சமையலறை கம்யூனிட்டி கிச்சன் என்ற செயல்திட்டம் இன்று (29.11.2022) அங்குராணப்பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேனியல் பூட் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய பாரத் அருள்சாமி ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல அரச அதிகாரிகளும், மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்
இக் கம்யூனிட்டி கிச்சனின் மூலமாக 100 சிறுவர்களுக்கு தினமும் போஷாக்கான உணவு வழங்குவதற்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, திறன் அபிவிருத்தி செய்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கண்டி பன்வில மருத்துவ அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான போஷாக்காக பானம், மருந்து வகைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள் உட்பட உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த உப தலைவர் பாரத் அருள்சாமி,
நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரண பொருளாதார நிலை காரணமாக உணவுக்கான பணவீக்கம் 86 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளையில் உணவுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்திலும் உள்ளது. அதுமட்டுமில்லாது அத்தியாவசிய தேவைக்கான 152 மருந்து வகைகள் தட்டுப்பாடாக உள்ளது. மேலும் மலையகத்தில் விசேடமாக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர்களுக்கான புரோட்டின் பற்றாக்குறை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான போஷாக்கான உணவு வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் கனேடிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சிலோன் யூத் மூவ்மென்ட்யின் வழிகாட்டலின் ஊடாக மத்திய மாகாணத்தில் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பிரஜாசக்தி நிலையங்களின் ஊடாக இந்த சமூக சமையலறை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கண்டி கேலாபொக்க, மஸ்கலியா பிரவுன்ஸ்வீக், மாத்தளை எல்கடுவ பிரஜாசக்தி நிலையங்களில் ஆரம்பித்துள்ளோம். இதனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும்.
இவ்வாறான சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் தேவை அறிந்து எமது வேண்டுகோளுக்கு இணங்க இத்திட்டத்தினை முன்னெடுக்க உதவிக்கரம் நீட்டிய கனேடிய தூதரகத்திற்கும், நேரடியாக விஜயம் செய்த உயரஸ்தானிகருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் இங்குள்ள இளைஞர், யுவதிகளின் திறன்சார் அபிவிருத்திக்கும் பெண்களின் தொழில் முனைவுக்கும் கனேடிய அரசாங்கம் தங்களது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக பாரத் அருள்சாமி இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கனேடிய உயர்ஸ்தானிகர் டேனியல் பூட்,
கனேடிய அரசாங்கம் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து மீள தங்களது அரசினால் வழங்கக்கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், இந்த சமூக சமையலறை வேலை திட்டம் தங்களது நாட்டின் உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்கு அமைவாக இலங்கைக்கு கை கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கண்டி கேலாபொக்க பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இங்குள்ள மக்களின் திறன் அபிவிருத்தி மற்றும் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பிற்கு தமது அரசும் இலங்கைக்கான கனேடிய தூதரகமும் முன் நின்று செயல்படும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment